
கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
கடந்த 2024 -ஆம் ஆண்டு ராமதாஸின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மேடையிலேயே அன்புமணி காட்டமாக பேசியிருந்தார். இதுதான் கட்சியின் பிரச்சனைக்கு துவக்கப்புள்ளி. அப்போது தொடங்கிய தந்தை - மகன் பூசல் இதுநாள் வரை நீடிக்கிறது. மேலும் ராமதாஸ் கட்சியிலிருந்து விலக்கும் நிர்வாகிகளை எல்லாம் அன்புமணி மறு நியமனம் செய்து வருகிறார். இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சச்சரவுகளுக்கு இடையில் சமீபத்தில் தந்து @தனது வீட்டில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி ரகசியமாக பொருத்தப்பட்டிருந்தததாகவும், தமது இருக்கையின் கீழ் இருந்த அந்த கருவியை சில தினங்களுக்கு முன்புதான் அப்புறப்படுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இன்று மீண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுவின் தைலாபுரம் தோட்டத்து சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு ராமதாஸ் சார்பில் சைபர் க்ரைமில் புகாரளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாசை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என்ற விவரத்தை சட்ட விரோதமாக சிசிடிவி மூலம் கண்காணித்துள்ளதாக குற்றச்சாட்டை ராமதாஸ் தரப்பு முன்வைத்துள்ளது. மருத்துவர் ராமதாஸ் -ன் தொலைபேசி உரையாடலும் கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக புகாரளிக்க உள்ளனர்.
தைலாபுரம் சிசிடிவி மற்றும் மருத்துவர் ராமதாசுவின் செல்போன் உரையாடலை கண்காணித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நாளை காலை 10.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் சைபர் க்ரைம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் ராமதாஸ் சார்பில் புகாரளிக்க உள்ளனர்.
தனது இருக்கையில் ஒட்டுக்கேட்புக் கருவியை அன்புமணி பொருத்தியதாக ராமதாஸ் குற்றம் சாட்டிய நிலையில் சிசிடிவி மற்றும் தொலைபேசி உரையாடல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்திருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.