“தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கக்கூடாது” - 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் - சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்!

மக்களவை தொகுதி இடப்பங்கீட்டையும் தற்போதுள்ள விகிதத்திலேயே நிலைநிறுத்த வேண்டும்...
cm vjay in assembly
cm vjay in assembly
Published on
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஜோசப் விஜய் இன்று அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், எதிர்கால தொகுதி மறுவரையறையால் நிரந்தரமாக பாதிக்கப்படக் கூடாது என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும், முதல்வர் ஜோசப் விஜய் இந்தத் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில், 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள தொகுதி மறுவரையறை தடையை நீக்குவது, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், அது தோல்வியடைந்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அதேபோன்ற அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற எந்தவொரு மக்கள்தொகை கணக்கெடுப்பையும் அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டாலும், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என முதல்வர் கூறினார்.

மக்கள்தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது மத்திய அரசின் முக்கிய கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தற்போது உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543-ஐ நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான மக்களவை தொகுதி இடப்பங்கீட்டையும் தற்போதுள்ள விகிதத்திலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இடையேயான தற்போதைய 2.2:1 என்ற விகிதத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்தார். இதனிடையே, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

மேலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் அதன் பிறகு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்குதல், மாநிலங்களுக்கு இடையேயான தொகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை தற்போதைய அளவில் தொடருதல் மற்றும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com