“அதிமுகவுக்கு அடுத்த ஷாக்” - விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த பிரபல ADMK நிர்வாகி.. யார் இந்த சிங்கை ராமச்சந்திரன்?

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்...
singai ramachandran meet cm vijay
singai ramachandran meet cm vijay
Published on
Updated on
2 min read

அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலராகவும், மாணவரணி நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி, கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், அவரது முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் முக்கிய பொறுப்புகள்

அதிமுகவின் இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலராகவும், மாணவரணி நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது தந்தை சிங்கை கோவிந்தராசுவும் அதிமுகவில் நீண்டகாலம் பணியாற்றியவர். ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது தந்தையின் கட்சி விசுவாசத்தை ஜெயலலிதா பாராட்டியதாகவும் தகவல்கள் உள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டி

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பி. கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் பணியில் சிங்கை ராமச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்தார். அவர்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ்களையும் வழங்கியிருந்தார்.

தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியா?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சிங்கை ராமச்சந்திரனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த (ஜூலை 23) ஆம் தேதி அதிமுகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.

அதிமுகவில் இருந்து விலகிய சில வாரங்களிலேயே அவர் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், சிங்கை ராமச்சந்திரனின் வருகையும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த சிங்கை ராமச்சந்திரன், அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com