

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால், முசிறி MLA விக்னேஷ், மணப்பாறை MLA கதிரவன் திருவெறும்பூர் MLA நவல்பட்டு விஜி மற்றும் காங்கிரஸ் MP கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சின் தொடக்கமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கேற்றினார். அவரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதிக், மணப்பாறை MLA கதிரவன், முசிறி MLA விக்னேஷ் ஏற்றினர். அதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்ற முயன்றார். அப்போது திருவெறும்பூர் MLA நவல்பட்டு விஜி கோவப்பட்டு மெழுகுவர்த்தியை வாங்கினார். மேலும் குத்து விளக்கு ஏற்றுவதற்கான மெழுகுவர்த்தியை கீழே தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் அவரை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவர் “விளக்கு ஏத்திட்டா போக வேண்டியது தான” என்று அமைச்சர் ரமேஷை கடிந்து கொண்டார். பின்பு திருவெறும்பூர் MLA நவல்பட்டு விஜி குத்துவிளக்கேற்றினார். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் குத்து விளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது கூட்டணி கட்சியினர் இடையே மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகம் மீது பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ் இந்த செயல் குறித்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் “வேறு கட்சியிலிருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கும் ஏற்கனவே தவெக-வில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் அனைவரும் அண்ணன் தம்பியாக இருக்கிறோம். தேவையில்லாத குழப்பங்களை யாரும் உருவாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
MLA நவல்பட்டு விஜியின் கோவத்திற்கு காரணம் குத்துவிளக்கு ஏற்றுவதும், காங்கிரஸ் MP க்கு முன்னுரிமை கொடுத்தது மட்டுமில்லை என்றும் இதற்கு வேறு சில உட்கட்சி மோதலும் காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொழிலதிபரான நவல்பட்டு விஜி, இதற்கு முன் தி.மு.க-வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர். அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவராகவும் இருந்து வந்துள்ளார். கலைஞர் காலத்தில் இருந்து, கட்சியில் இருந்து களப்பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த, 2016-ம் வருட தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து இருந்தார். இவர்தான் வேட்பாளர்' என்று நம்பி, களத்தில் வேலையை தொடங்கினார். ஆனால் அந்த தேர்தலில் அன்பில் மகேஷ்க்கு சீட் கிடைத்து முதல் வெற்றியை பதிவு செய்தார். பின்னர் கட்சியில் ஏற்பட்ட பகைமை காரணமாக அவரது ஒன்றிய செயலாளர் பதவி பறிபோனது. பின்னர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தவெக வில் இணைத்தார். இந்நிலையில்தான் 2026-ல் அன்பில் மகேஷை எதிர்த்து தவெக வேட்பாளராக களமிறங்கினர் விஜி. அதே தொகுதியில் 9000-க்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் அன்பில் மகேஷை வெற்றி பெற்றார் நவல்பட்டு விஜி.
ஆனால் ரமேஷ் தொடக்கத்தில் இருந்தே விஜய் ரசிகர் மன்றத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் தவெக தொடங்கியதில் இருந்து கட்சி பணியாற்றி வருகிறார். 2026- சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அமைச்சரவையிலும் இடம் பெற்றார். சொந்த ஊரான செங்கல்பட்டை விடுத்து, தற்போது தனது தொகுதியான திருச்சி ஸ்ரீரங்கத்தை தன்கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், தனக்குக் கிடைக்காத அமைச்சரவை இடம் ரமேஷுக்கு கிடைத்திருப்பது நாவல்பட்டு விஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அப்போதே அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உலவியது. தற்போது, தனது சொந்த ஊரில் உரிய மரியாதை கிடைக்காதது போன்ற காரணங்களே MLA விஜியின் கோபத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து ரமேஷின் வழிகாட்டலில் நான் இயங்க வேண்டுமா போன்ற எண்ணமும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி இருந்தால் இன்றைய குத்து விளக்கு மோதலுக்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்