கொடநாடு வழக்கு: "விசாரிக்காத தமிழக அரசு" ஆர்பாட்டம் நடத்தும் ஓபிஎஸ்!

கொடநாடு வழக்கு: "விசாரிக்காத தமிழக அரசு" ஆர்பாட்டம் நடத்தும் ஓபிஎஸ்!
Published on
Updated on
1 min read

கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்காத தமிழக அரசை கண்டித்து வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மற்றும் பன்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், திமுக ஆட்சி அமைத்ததும் 90 நாட்களுக்குள் கொடநாடு கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் என கூறிய அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது திமுக மீது கோபத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். 

எனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் கவனமும் அதி முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்தும் வகையில் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், "நீங்கள் அதிகாரத்தில் இருந்தபோது இது குறித்து ஏன் வலியுறுத்தவில்லை?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அப்போது தான் துணை முதலமைச்சராக தான் இருந்ததாகவும், அந்த பதவிக்கு எந்த அதிகாரமும், முக்கியத்துவமும் இல்லை என பதிலளித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறினார். இதைத் தொடர்ந்து, வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க தமக்கு அழைப்பு வரவில்லை என கூறிய ஓ.பி.எஸ், தங்கள் அணியின் அடுத்த மாநாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறினார். 

அவரைத் தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தேனி தொகுதியில் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என வழங்கப்பட்ட தீர்ப்பு முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும்  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com