காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் சுற்றுப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம், operation sindoor என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகள் இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுமே இன்று ஒரே நேரத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருப்பதால் அடுத்து என்ன நடக்குமோ என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பதற்றத்தால் வட இந்தியாவில் விமான சேவை பாதிப்பு, மக்களுக்கு எச்சரிக்கை, பள்ளி-கல்லூரிகள் மூடல் என அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லையில் நடக்கும் விஷயங்களால் நாடே பதற்றமாகி உள்ள நிலையில் நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளது தமிழக அரசியலில் பதற்றத்தை கிளப்பி உள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பு :
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். தி.மு.க.., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை சுட்டிக்காட்டினார். மேலும், 2026 தேர்தலில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்கப் போவதாக கூறினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது இருந்த சந்தோஷத்தை விட, இப்போது அதிக சந்தோஷம் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறினார். பாகிஸ்தானில் 9 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்கியதற்கு, தமிழக பா.ஜ.க. சார்பில் மோடிக்கு நன்றி தெரிவித்தார். "இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, இன்று சந்தோஷம் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது" என்று அவர் கூறினார்.
பாஜக.,வின் அடுத்த ஆபரேஷன்:
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 177-வது வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். இது போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே இருப்பதால், கூட்டணியை விரைவில் முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் போல, 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷனா? இது என்ன புதிதாக இருக்கு என பலர் யோசிக்கலாம். ஆனால் இது தான் தமிழக சட்டசபை தேர்தலுக்கு பாஜக வகுத்து வரும் புதிய பிளானாம். இது திமுக.,விற்கு எதிரான தீவிரமான ஆபரேஷனாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர போகிறது என்பதை பொறுத்தே இந்த ஆபரேஷனின் தீவிரம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை மிக வலிமையான கூட்டணியை பாஜக அமைத்தால், அது திமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை தேர்தலுக்கு முன்பே ஏற்படுத்தி விடும்.
அரசியல் உத்திகள்:
பாஜக, தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பாஜக முயற்சிக்கிறது.
மேலும், திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனது வாக்கு வங்கியை அதிகரிப்பது பாஜகவின் முக்கிய இலக்காகும்.
வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜக.,விற்கு காத்திருக்கும் சவால்கள் :
திராவிட அரசியல் வலுவாக உள்ள தமிழ்நாட்டில், பாஜக தனது இடத்தை நிலைநிறுத்துவது சவாலான விஷயமாகும்.
- திமுகவின் வலுவான வாக்கு வங்கி மற்றும் அதிமுகவின் கூட்டணி, பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
- மேலும், தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்வுகளை பாஜக எவ்வாறு கையாள்கிறது என்பதை பொறுத்தே, அதன் வெற்றி தீர்மானிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளின் கையே ஓங்கி இருக்கிறது. தற்போது புதிதாக இதில் பாஜக இணைந்தால் தமிழக அரசியல் களம் இனி எப்படி இருக்கும் என கணிக்க முடியாமல் உள்ளது. இதனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்