

மதுரையில் தமிழக அரசு சார்பில் இன்று (செப் 28) 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை' முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். 22.6.2026 அன்று முதல் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
மேலும், இந்த திட்டத்திற்காக தனி விமானத்தின் மூலம் இன்று காலை முதல்வர் விஜய் மதுரை வந்தடைந்தார். முதல்வர் விஜயை ஆரவாரத்தோடு தூங்கா நகர மக்கள் வரவேற்றனர். இதனையடுத்து, 'மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை'யில் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கி திட்டதை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார்.
இதில் முதலாவதாக 'முத்து யாழினி' என்ற பச்சிளம் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கி தொடங்கிவைக்கப்பட்டது. பின்னர், வரிசையாக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கினார். இதனையடுத்து, முதல்வர் மேடையில் இருந்து இறங்கி அரங்கத்தில் அமர்ந்திருந்த தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான மோதிரத்தை முட்டிபோட்டு வழங்கினார்.
மேலும், குழந்தைகளை தூக்கி கொஞ்சி, முத்தமிட்டும் மோதிரத்தை வழங்கினார். மேலும், ஆசையோடு தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லி கேட்ட தாய்மார்களின் கோரிக்கையை அங்கேயே நிறைவேற்றினார்.
ஒவ்வொரு குழந்தைகளையும் கொஞ்சி ஆரத்தழுவி முத்தமிட்டு முதல்வர் அன்பை வெளிப்படுத்தினார். இதனால், தாய்மார்களின் ஆனந்த கண்ணீரால் அரங்கமே நனைத்தது. மேலும், மகிழ்ச்சி மிகுதியால் ஒரு தாய் ஆனந்த கண்ணீர் சிந்தியதில் முதல்வர் அவரை அன்போடு அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ஒரு தாய் தனது குழந்தையின் ஆடையில் முதல்வரின் கையொப்பத்தை போடச்சொல்லி விரும்பி கேட்டுக்கொண்டதன் பெயரில், முதல்வர் அவரது விருப்பத்தையும் நிறைவேற்றினார். பின்னர், அரங்கத்தில் இருந்த தாய்மார்களின் குடும்பத்தினரோடு கைகுலுக்கியதோடு, புகைப்படம் எடுக்க விரும்பியவர்களோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அதன் பின்னர், அங்கு குழுமியிருந்த தாய்மார்களோடு குழு புகைப்படமும் எடுத்தார். விழா தற்போது நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக முதல்வர் 10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை விஜய் திறந்து வைக்க உள்ளார். அதன் பின்னர் மாலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்வார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்