நிஜ 'தீரன் அதிகாரம் ஒன்று' உயிரைப் பணயம் வைத்த காவலர்.. கோவையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்! நாடே திரும்பிப் பார்க்கும் இவர் யார்?

காரின் கூரையில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்ற தலைமை காவலர் வேல்முருகனைக் காப்பாற்றவும், கடத்தல்காரர்களைப் பிடிக்கவும் பின்னாலேயே வந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் காட்சிகளைப் பதிவு செய்தனர்.
Covai Policeman
நிஜ 'தீரன் அதிகாரம் ஒன்று' 40 கிலோமீட்டர் கார் மேல் பயணித்த காவலர்.. கோவையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்!
Published on: 
Updated on: 
2 min read

கோயம்புத்தூரைச் சேர்ந்த காவலர் வேல்முருகனின் சாகசம் நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.

கோவையில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ சட்டவிரோத குட்கா போதைப் பொருட்களைக் கைப்பற்றும் முயற்சியில், வேல்முருகன் என்ற காவலர் காரின் மேற்புறத்தைப் பாய்ந்து பிடித்து 40 கிலோமீட்டர் பயணித்த சினிமாவை விஞ்சும் த்ரில்லிங் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நேற்றைய தினம் கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் வழக்கம்போல் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் சொகுசு கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர்.

கைது செய்யப்பட்டபோது காயமடைந்த குற்றவாளிகள்
கைது செய்யப்பட்டபோது காயமடைந்த குற்றவாளிகள்

காரின் பின் இருக்கையில் மூட்டை மூட்டையாகப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, உதவி ஆய்வாளர் விக்னேஷ் அதை ஆய்வு செய்ய முற்பட்டார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள், உதவி ஆய்வாளரைத் தள்ளிவிட்டு, கதவுகளைச் சாத்திக்கொண்டு காரை அதிவேகமாகப் பறக்கவிட்டனர்.

கடத்தல்காரர்கள் தப்ப முயன்றதைக் கண்டு கணநேரத்தில் செயல்பட்ட தலைமை காவலர் வேல்முருகன், ஓடும் காரின் மேற்கூரையின் (Roof) மீது பாய்ந்து, காரை பலமாகப் பிடித்துக் கொண்டார்.

தலைமை காவலர் மேலேயே தொங்கிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாத கடத்தல்காரர்கள், காரை நிறுத்தாமல் விளாங்குறிச்சி, காளப்பட்டி நாலு ரோடு, சித்ரா வழியாகக் கணியூர் சுங்கச்சாவடியை (Tollgate) நோக்கி அதிவேகமாகச் செலுத்தினர். கணியூர் டோல்கேட்டில் ‘அட்வான்ஸ் ஃபாஸ்ட் டிராக்’ (FASTag) வசதியைப் பயன்படுத்தி சுங்கச்சாவடித் தடைகளை உடைத்துக்கொண்டு கார் மேலும் பறந்தது.

காரின் கூரையில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்ற தலைமை காவலர் வேல்முருகனைக் காப்பாற்றவும், கடத்தல்காரர்களைப் பிடிக்கவும் பின்னாலேயே வந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் காட்சிகளைப் பதிவு செய்தனர்.

அதே நேரத்தில், இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கணியூர் போலீஸ் ரோந்து வாகனம், கணியூர் ஆம்புலன்ஸ், எல்.ஜி. மருத்துவமனை ஆம்புலன்ஸ், பாலா ஆர்த்தோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் ‘சினேகம்’ ஆம்புலன்ஸ் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்தக் காரைத் தீவிரமாகத் துரத்திச் சென்றனர்.

உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவிநாசி போலீசாரும் காரை எதிர்நோக்கி வந்தனர். இறுதியில், அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே சென்றபோது, ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தன.

காரை நிறுத்தியதும், அதில் இருந்த இருவர் தப்பிய நிலையில், ஒருவரை போலீசார் உடனடியாகப் பிடித்தனர். தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீசார் கைது செய்தனர்.

கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன்
கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன்

கைது செய்யப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 3 நபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 300 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து, கோவையில் கைமாற்ற முயன்றது தெரியவந்தது.

காவல்துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 300 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரைப் பொருட்படுத்தாமல் காரின் கூரையில் 40 கி.மீ தூரம் தொங்கியபடி சென்று கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமை காவலர் வேல்முருகனின் இந்தத் தீரச் செயல் மற்றும் அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் நண்பர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்துறைப் படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள், ஆபத்தான சூழ்நிலையிலும் குற்றவாளிகளைப் பிடிக்க துணிச்சலுடனும், துரிதமாகவும் செயல்பட்ட முதல் நிலைக் காவலர் வேல்முருகனின் வீரத்தையும், கடமை உணர்வையும் வெகுவாகப் பாராட்டினார்.

Covai Policeman
மதுரை புறப்பட்ட விஜய்: 'பிஞ்சு விரல்களுக்கு தங்க மோதிரம்' 2500 காவலர்கள் பாதுகாப்பு; மீனாட்சி அம்மன் தரிசனம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com