உதயநிதி கைது எதிரொலி: தஞ்சாவூரில் விஜய் உருவ பொம்மை எரிப்பு.. கடுமையாக மோதிக் கொள்ளும் தவெக மற்றும் திமுக தொண்டர்கள்!

அங்கு பேரணியாக வந்த திமுகவினர் அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதுடன், தவெக கொடியை அகற்றி...
thanjavur tvk and dmk clash
thanjavur tvk and dmk clash
Published on
Updated on
1 min read

தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை திரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் திமுக–தமிழக வெற்றிக் கழகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பனங்கள் கட்டிடம் அருகே உதயநிதி கைது நடவடிக்கையை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பேரணியாக வந்த திமுகவினர் அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதுடன், தவெக கொடியை அகற்றி வீசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அண்ணா சிலை அருகே திரண்டிருந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் எதிரெதிராக திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஒருகட்டத்தில் திமுகவினர் விஜய்யின் உருவப் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் செருப்புகளாலும், கைகளில் வைத்திருந்த பைப்புகளாலும் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணா சிலை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.நிலைமை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி கைது விவகாரத்தைத் தொடர்ந்து திமுக–தவெக இடையேயான அரசியல் மோதல் தற்போது நேரடி கள மோதலாக மாறியிருப்பது தஞ்சை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com