நைட்டியை கூட மாற்ற விடாமல் அப்படி கைது பண்ணனுமா? - "கார்த்திகா" கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு

செய்தியாளர்களை பார்த்து பேசிய கார்த்திகா, “நான் என்ன போதைப்பொருள் கடத்தினேனா..?"
NTK karthika arrest
Published on: 
Updated on: 
2 min read

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா நேற்று கோவையில் கைது செய்யப்பட்டார். தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா, தேர்தல் பிரசாரத்தின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் விஜய் வரும் பாதையில் பிரச்சாரம் மேற்கொண்டது போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கோவை இல்லத்தில் இருந்த கார்த்திகாவையும் அவரது கணவரையும் கைது செய்து தாராபுரம் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், MP கனிமொழி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கண்டனம் எழுப்பினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று கார்த்திகா உட்பட 9 பேரை கைது செய்த தாராபுரம் போலீஸ், நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜர் படுத்தியுள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் அவர்களிடம் நீதிபதி நேரடியாக விசாரணை மேற்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் போலீசார் கொடுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்தார். 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணைக்கு பிறகு, கார்த்திகா உட்பட 9 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 9 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களை பார்த்து பேசிய கார்த்திகா, “நான் என்ன போதைப்பொருள் கடத்தினேனா.. தேர்தலில் நின்றது ஒரு குத்தமா? என்னை பேசக்கூடாது என்கிறார்கள்” என்றும் “கைது செய்யும் முன், தன்னை உடை மாற்ற கூட அனுமதிக்கவில்லை.. என்றும் கார்த்திகா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்த கைது காழ்ப்புணர்ச்சியால் செய்யப்பட்ட கைது என்றும் முழுமையான அத்துமீறல் கைது என்றும் சாடினார். மேலும், “இடைத்தேர்தலில் நடந்த ஒரு விஷயத்திற்கு அதிகாலையில் சென்று..  அவரை உடைமாற்ற கூட அனுமதி கொடுக்காமல் கைது செய்ய வேண்டிய சூழ்நிலை என்ன?” என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து எதிர்க்கட்சியை சார்ந்த பெண்களை அவதூறாக சமூக வலைதளங்களில் மிக கேவலமாக பதிவிட்டு வருகிறார்கள் என்றும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் மனம் நோகும்படி எது நடந்தாலும் உடனடியாக காவல்துறை கைது செய்கிறார்கள் என்றும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com