தாராபுரத்தில் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக களமிறங்கிய கார்த்திகா நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவரின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஆதரவு குரல் எழுப்பிய அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்க தலைவர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பதிவை பகிர்ந்தார். அந்த பதிவை காட்டமாக விமர்சித்த சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு “திமுகவுக்கு வெட்கமில்லை.. நாதகவிற்கும் வெட்கமில்லை” என்று தனது X தளத்தில் பதிவிட்டார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் மற்றும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளரும், இளைஞர் அணி மாநில அமைப்பாளருமான இடும்பாவனம் கார்த்திக், விசிக-வின் கூட்டணி வரலாறுகளை குறித்தும், அக்கட்சியின் தலைவர் திருமா குறித்தும் காட்டமான விமர்சனத்தை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். 2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார் இடும்பாவனம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பதிவு பின்வருமாறு;-
யாருக்கு வெட்கமில்லை.. பாஜகவை கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, 2001 ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியில் அங்கம்! விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு, இரண்டே ஆண்டுகளில் 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் அங்கம்! "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்தார் கருணாநிதி" என 2004ஆம் ஆண்டு விமர்சித்து கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டு, 2006ஆம் ஆண்டு மீண்டும் திமுக கூட்டணியில் ஐக்கியம்! 2009ஆம் ஆண்டு சனவரி மாதம் காங்கிரசுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு, அதே ஆண்டு மே மாதம் காங்கிரசுடன் கூட்டணியில் ஐக்கியம்!
'சாதிய அரசியல் செய்கிறது பாமக' என விமர்சிக்கப்பட்டக் காலத்திலேயே, 2009ஆம் ஆண்டு பாமகவோடு ஒரே கூட்டணியில் அங்கம்! "விஜயகாந்துக்கு நாடாள என்ன தகுதி இருக்கிறது?" எனக் காட்டமாக விமர்சித்துவிட்டு, அதே விஜயகாந்தைத் தலைமையேற்று, 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் அங்கம்!
'கண்ணாடி விரியன்' எனக் கூறி நச்சுப் பாம்பென திமுகவை 2016ஆம் ஆண்டு விமர்சித்துவிட்டு, 2019ஆம் ஆண்டு அதே திமுகவுடன் கூட்டணியில் ஐக்கியம்! 2017ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவித்தபோது, அதனை வரவேற்று Charistmatic Leader எனவும், அவர் முன்வைக்க விரும்பும் அரசியல் எல்லோருக்குமானது எனவும் புகழாரம் சூட்டிவிட்டு, அதே ரஜினிகாந்தை எதிர்த்து சில மாதங்களிலேயே விமர்சனம்!
கமல்ஹாசனை, 'பாஜகவின் கைக்கூலி' என 2019 ஆம் ஆண்டு விமர்சித்துவிட்டு, அதே கமல்ஹாசனை வைத்து 2024 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் தங்களது வெற்றிக்காகப் பரப்புரை! 2026 ஆம் ஆண்டு, 'RSSன் பிள்ளை' என தவெகவை விமர்சித்துவிட்டு, தேர்தலுக்குப் பின்னர், அதே தவெகவோடு கூட்டணி - அமைச்சரவையில் அங்கம்! 2026 ஆம் ஆண்டு திமுகவும், அதிமுகவும் இணைந்து திருமாவை முதல்வராக்க ஒரு முயற்சி எடுத்தபோது, அதற்காகப் பின்புலத்தில் ஆதரவளித்தது!
மேலும், “திருமா துண்டுபோட்டு வைக்காத கட்சிகளே இல்லை என்றும் கூட்டணி வைக்காத இயக்கங்களே இல்லை” என்றும் சாடி இருந்தார். தேவைப்பட்டால், ராஜபக்சேவோடும் கைகுலுக்குவார்; அமித்ஷாவையும் அரவணைத்துப் பேசுவார். எதற்கும் கூச்சப்படவோ, வெட்கப்படவோ மாட்டார் திருமா என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சந்தர்ப்பவாத அரசியலின் முழு உருவம் திருமா! திருமாவைத் தலைவராக ஏற்றுக் கொண்ட வன்னியரசு, தேர்தல் அரசியலில் சமரசமே செய்யாது இருக்கிற எங்களைப் பார்த்துப் பேசலாமா? விஜய்யைக் கோழை என விமர்சித்துவிட்டு, அதே கோழையின் அமைச்சரவையில் தொடர்வதற்காக கூழைக்கும்பிடு போடும் வன்னியரசுக்கு எங்களைப் பேச என்ன அருகதை இருக்கிறது? என்றும் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன் ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை, கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு “கோழை” என வன்னி அரசு விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.