"ராகுல் காந்தியை விட அவர் பெரிய ஆளா?" - செல்வப்பெருந்தகை கேட்ட கேள்விக்கு மாணிக்கம் தாகூர் சொன்ன 'நச்' பதில்!

பாஜகவினர் பெண்களைப் பற்றிப் பேசும் இழிவான செயல்களுக்குத் தமிழகக் காவல்துறை...
"ராகுல் காந்தியை விட அவர் பெரிய ஆளா?" - செல்வப்பெருந்தகை கேட்ட கேள்விக்கு மாணிக்கம் தாகூர் சொன்ன 'நச்' பதில்!
Published on
Updated on
2 min read

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாணிக்கம் தாகூர் எம்பி, இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கியக் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சீர்மரபினர் எனப்படும் டிஎன்டி சமூகத்தைச் சேர்ந்த பிரமலைக் கள்ளர் உள்ளிட்டோரைத் தனியாகக் கணக்கிட வேண்டும் என்பதே அந்தக் கடிதத்தின் சாரம்சம். இவர்களைப் பொதுவான பிரிவில் சேர்ப்பது அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிப்பதாக அமையும் என்பதால், சென்சஸ் படிவத்தில் இவர்களுக்கெனத் தனிப் பத்தியை ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாஜகவினர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்துச் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசி வருவதற்கு மாணிக்கம் தாகூர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். சாதாரணக் குடும்பத்தில் இருந்து உயர்ந்து இருமுறை எம்பியாகத் தேர்வான ஒரு பெண்ணைப் பற்றி இழிவாகப் பேசுவது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கலாச்சாரமாக மாறிவிட்டதாக அவர் சாடினார். பாஜக நிர்வாகிகள் பெண்களை அவதூறாகப் பேசுவதை ஒரு வியாதியாகக் கொண்டுள்ளனர் என்றும், பிரதமர் மோடி இந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இவருக்கும் இடையே நிலவும் மோதல் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், செல்வப்பெருந்தகை தனக்கு அண்ணன் போன்றவர் என்றும், அண்ணன் - தம்பிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கை என்றும் கூறினார். தாங்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகியோரின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தப் பாடுபடும் சகோதரர்கள் என்று கூறிய அவர், பத்திரிகையாளர்கள் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ஆட்சியில் அதிகாரப் பங்கீடு கோருவது குறித்துத் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டதாக அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். டெல்லியில் கட்சித் தலைமையிடம் இது குறித்து விவாதித்துவிட்டு வந்திருப்பதாகவும், ஒரு விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இன்று காலை அவர் பதிவிட்ட 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாரதியார் பாடல் வரிகள் யாரிடமும் அஞ்சுவதற்காகப் போடப்பட்டவை அல்ல என்றும், அவை ஒரு நல்ல சிந்தனையாக மட்டுமே பதிவிடப்பட்டவை என்றும் அவர் விளக்கமளித்தார்.

எதிர்வரும் தேர்தல்கள் குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், இது தமிழகத்தின் நன்மைக்காக இந்தியா கூட்டணிக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று வர்ணித்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்கும் மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான இந்த யுத்தத்தில் தமிழகம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாஜகவினர் பெண்களைப் பற்றிப் பேசும் இழிவான செயல்களுக்குத் தமிழகக் காவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com