தமிழக முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திராவிற்கு செல்கிறார். இந்த பயணம் வெறும் ஆன்மீக பயணமாக மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் அமையும் என சொல்லப்டுகிறது. முதல்வர் விஜய் ஆந்திரா விஜயவாடாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனக துர்கா கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 4 மணி அளவில், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் சென்னைக்கான கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி–கிருஷ்ணா–காவிரி நதிநீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் வரலாறு, ஆன்மீக சிறப்புகள் மற்றும் பாரம்பரியங்கள் குறித்து பல்வேறு பிரமிக்க வைக்கும் வரலாறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றான இந்த கனக துர்கா கோவில், கிருஷ்ணா நதியின் அழகிய பின்னணியில் அமைந்துள்ளது. புராண மரபுகளின்படி, இந்திரகீலாத்ரி மலையுடன் தொடர்புடைய கதைகளும், மகிஷாசுரனை வதம் செய்து தீமையை அழித்த துர்கை அம்மனின் பெருமையும் இக்கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்துடன் இணைக்கப்படுகின்றன.
ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வந்து ஸ்ரீசக்கரத்தை நிறுவியதாகவும், அதன் மூலம் அம்மனின் உக்கிரத் தன்மை தணிக்கப்பட்டதாகவும் பக்தர்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது. இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், கனக துர்கா அம்மன் சன்னதியுடன் தொடர்புடைய மல்லேஸ்வர சுவாமி எனப்படும் சிவபெருமானின் சன்னதியாகும். சிவனும் சக்தியும் ஒரே திருத்தலத்தில் இருப்பது ஆன்மீக முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலும் வேறொரு சிறப்பம்சங்களாக நம்பப்படுபவை, அந்த கோவில் பெண் தெய்வம் தைரியம், வலிமை மற்றும் தீமையை எதிர்த்துப் போராடும் சக்தியின் அடையாளமாக கருதுவது. கனக துர்கா அம்மனை வழிபடுவதன் மூலம் மனதில் உள்ள பயங்கள் நீங்கி, தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும், குடும்ப நலன், தொழில் முன்னேற்றம் மற்றும் அரசியல் ரீதியாகவும் நன்மை நடக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைக் காலங்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் தசரா நேரத்தில் மாநில அரசின் சார்பில் அம்மனுக்குப் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மாநிலத்தின் முதலமைச்சர் பட்டு வஸ்திரத்தைச் சமர்ப்பித்து வழிபடுவது இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். அரசியல் தலைவர்களும் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கோவில்களுக்குச் சென்று வழிபடுவது இந்திய அரசியல் பண்பாட்டில் காணப்படும் வழக்கமாகும். இருப்பினும், ஒவ்வொரு தலைவரின் வருகைக்கான காரணமும் தனித்தனியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்