வக்கில் ஒருவர் திருடனுக்கு பீரோவில் கடிதம் எழுதி ஒட்டி வைத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் காட்வின் சாத்ராக். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய வீட்டில் 2018 அக்டோபர் மாதம் அன்று 55சவரன் நகைகள் ,25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது.இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது திருடனின் முகம் பதிவாகிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது ஆனால் திருடனை பிடிக்க முடியவில்லை.
மீண்டும் 2019 நவம்பரில்,இவரது வீட்டில் குடியிருந்த ஜான்பால் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து அரை சவரன் மோதிரம் திருடப்பட்டது.அப்போதும் திருடனின் முகம் பதிவாகிய கேமரா காட்சிகளும்,கைரேகைகளும் கிடைத்தது.இந்த திருட்டு சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் வரை சென்றும் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்களை பிடிக்க முடியவில்லை .
இதனால் அதிருப்தி அடைந்த காட்வின் சாத்ராக் கடந்த இருபத்தி எட்டாம் தேதி சொந்த ஊரான கன்னியாகுமரி செல்லும் முன் வீட்டு பீரோவில் ”தம்பி பீரோவை உடைத்து விடாதே எப்படியும் உன்னை போலீசார் பிடிக்க போவதில்லை.. சேதாரம் செய்து விடாதே என திருடனுக்கு கடிதம் எழுதி அதை பீரோவில் ஒட்டி சென்றுள்ளார் இது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.