போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம்...! உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!

போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம்...! உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!
Published on
Updated on
2 min read

சென்னை- பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம் தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கமளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியும், தற்போது மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையருமான நர்மதா நேரில் ஆஜராகியிருந்தார். அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே தவறானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இத்திட்டத்தின் கீழ் நெமிலி, அயக்குளத்தூர் கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 982 சதுர மீட்டர் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 286 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீட்டில், 247 கோடியே 46 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், 38 கோடியே 93 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இழப்பீட்டுத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பீடாக செலுத்தும்படி கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின், அதே ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இழப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டுள்ளதால், அது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் எனக் கூறிய நீதிபதி, இதுசம்பந்தமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் மேற்கொள்ளக் கூடாது என விளக்கமளிக்க, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, இழப்பீடு பெற்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வருவதாகவும், மொத்தம் 39 கோடி ரூபாய் அளவுக்கு இதுபோல இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை முன்னேற்றம் குறித்தும், திரும்ப வசூலிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறித்தும் ஜனவரி 25 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினமும் நேரில் ஆஜராகும்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com