

திருநள்ளாறு தொகுதியில் வெற்றி மிக பிரகாசமாக உள்ளதாக பாஜக வேட்பாளர் ஜிஎன்எஸ். ராஜசேகரன் கூறியிருக்கிறார்.
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில், திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக, 'மக்கள் சேவகர்' ஜிஎன்எஸ். ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் மத்தியிலும், கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையேயும் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாமக சார்பில் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் பிரபாகரன் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் திருநள்ளாறு பாஜக வேட்பாளர் ஜிஎன்எஸ். ராஜசேகரன் மற்றும் ஜிஎன்எஸ். நடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி வேட்பாளர் ஜிஎன்எஸ். ராஜசேகரனை, 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய ஜிஎன்எஸ். நடேசன், கடந்த தேர்தலில் ஏதேதோ மக்கள் மத்தியில் பொய்களை சொல்லி, தேர்தலில் தோல்வியடைய செய்துவிட்டனர். அது இந்தமுறை நடைபெறாது என்று அவர் தெரிவித்தார். ஜிஎன்எஸ். ராஜசேகரன் தங்களோடு தோளோடு தோள் நின்று மக்கள் சேவையாற்றுவர் என்று ஜிஎன்எஸ். நடேசன் நம்பிக்கை தெரிவித்தார். "கடந்த முறை நம்மை ஏமாற்றிவிட்டார்கள், தற்போது 'இது என்னுடைய சொந்தம்' என்று ராஜசேகரன் கூறிவிட்டார். அவரை வெற்றியடைய செய்யுங்கள் உங்களை அவர் நன்றாக பார்த்துக்கொள்வார். நான் உங்களுடைய நண்பனாக இருந்தேன் அவர் உங்களுடைய உறவாக இருப்பார்" என்று ஜிஎன்எஸ்.நடேசன் கூறினார்.
இதனையடுத்து பேசிய திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளர் ஜிஎன்எஸ். ராஜசேகரன், அனைவரும் ஒற்றுமையோடு இருந்து, தேர்தல் பணியாற்றினால் கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எதிரிகளை டெபாசிட் இழக்க வைப்பது உறுதி என்றும் அவர் தெரிவித்தார். "முன்பு கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி இருந்தது. கூட்டணி இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, உங்களோடு நான் இருப்பேன். நீங்கள் ஒற்றுமையாக இருந்து முழு முயற்சியுடன் எங்களுடைய வெற்றிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் கூட்டணி கட்சியோடு சேர்ந்து போய் ஓட்டு கேட்கவேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இன்றிலிருந்து நாம் அதற்கான வேலைகளை நாம் செய்தால் 9 அல்லது 10 நாட்கள்தான் எதிரிகளை டெபாசிட் இழக்க வைக்கமுடியும்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜிஎன்எஸ். ராஜசேகரன், பாமகவினர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், வெற்றி மிக சிறப்பாக உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.