“தவெக–விசிக இணைந்தே பயணிக்கும்” - திருமாவளவன் பேச்சால் பரபரக்கும் அரசியல் களம்.. இடைத்தேர்தல் கூட்டணி உறுதியானதா?

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருமாவளவன் தனது உரையை எதிர்பார்த்ததைவிட சுருக்கமாக முடித்துக் கொண்டார்...
VCK Tamil National Conference
VCK Tamil National Conference
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், விசிக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்ததால் மாநாட்டு வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.மாநாட்டில் பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்றும் தொண்டர்களிடையே பேசினார்.

மேலும், கடந்த காலங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பயணித்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, “இன்றைக்கு ஆளுகின்ற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறோம். இனியும் விடுதலை சிறுத்தைகளும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து இந்த தமிழ் தேசிய பயணத்தில் பயணிக்கும்” என திருமாவளவன் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்றும் சூளுரைத்தார். இதனிடையே, மாநாட்டில் தொண்டர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. திருமாவளவன் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தொண்டர்கள் மேடை மற்றும் ரேம்ப் வாக் நடைபெறும் பகுதிகளிலும் திரண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிரமம் ஏற்பட்டது. மேலும், தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருமாவளவன் தனது உரையை எதிர்பார்த்ததைவிட சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

நீண்ட நேரம் தலைவரின் உரையை கேட்கலாம் என எதிர்பார்த்திருந்த தொண்டர்கள், அவர் உரையை விரைவாக முடித்ததால் ஏமாற்றமடைந்தனர். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவைப்பட்ட  சூழலில், திமுக கூட்டணியில் இருந்தபோதும் விசிக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. எனவே  தவெக முன்வைத்த கூட்டாட்சி கொள்கையின் அடிப்படையில் ஆட்சி அமைந்த பின்னர், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுக்கு சமூகநீதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இருப்பினும், இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி தொடர்பாக இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியாகாத நிலையில், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் “இனி தவெகவும் விசிகவும் இணைந்தே பயணிக்கும்” என திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரது இந்தப் பேச்சு, வரும் இடைதேர்தலை முன்னிட்டு தவெக–விசிக கூட்டணி தொடர்வதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com