"இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!".. அதிகாரிகளை புது யோசனையால் அலறவிட்ட திருவெறும்பூர் தவெக MLA!

1000 அடி ஆழமுள்ள குவாரிகளில் (பாறை குழிகளில்) குப்பைகளை கொட்டி நிரப்பலாம் என ஆலோசனை கொடுத்தார்
Thiruverumpur TVK MLA
Published on
Updated on
2 min read

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் குவியும் குப்பைகளை அகற்ற டெண்டர் மூலம் 40 கோடி ரூபாய் செலவு செய்ய தேவையில்லை, 30 கோடி ரூபாய் செலவில் கல் குவாரியில் கொட்டினால் நிரந்தர தீர்வு காணலாம் என அதிகாரிகளுக்கு ஐடியா கொடுத்த திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி 

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவது குறித்து நேற்று திருவெறும்பூர் தவெக எம் எல் ஏ நவல்பட்டு விஜி ஆய்வு மேற்கொண்டார். அரியமங்கலம் குப்பை கிடங்கு 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் வந்து இங்கு கொட்டப்படுகிறது. மலைபோல் குவிந்திருக்கும் இந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பல போராட்டங்களில் ஈடுபட்டதுடன் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் இங்கு பயோ மைனிங் எனும் மறுசுழற்சி திட்டத்தின் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் குப்பைகள் குவிந்த வண்ணமே உள்ளது.  இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் குப்பைக்கிடங்கை முற்றிலும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில், புதிதாக பெறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அரியமங்கலம் குப்பை கிடங்கில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பயோ மைனிங் திட்டத்தின் மூலம் 40கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு குப்பைகளை அகற்றுவதற்கு பதிலாக,  துவாக்குடி பகுதியில் கைவிடப்பட்ட 1000 அடி ஆழமுள்ள  குவாரிகளில் (பாறை குழிகளில்) குப்பைகளை கொட்டி  நிரப்பலாம் என ஆலோசனை கொடுத்தார். மேலும் இதன் மூலம் குவாரிகளும் மூடப்படும், குப்பைகளும் குப்பை கிடங்கில் தேங்காமல் இருக்கும் என தெரிவித்தார். குப்பைகளை நேரடியாக குவாரியில் கொட்டுவதால் 30 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும், அதற்கு மாநகராட்சி ஆணையர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். 

ஆனால், சுற்றுச்சூழல் நிபுணர்கள் பார்வையில், குப்பைகளை நேரடியாக குவாரிகளில் கொட்டுவது நிரந்தர தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சரியான விஞ்ஞான முறைகள், கழிவுகள் பிரித்தல், லீசேட் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் குப்பைகள் கொட்டப்பட்டால், நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளத்தில் இது குறித்த ட்ரோல் பதிவுகள் அதிகரித்து உள்ளது. இதற்கு முன் தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் உருவ பொம்மையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com