“ஒரு கட்சி இல்லாமையே போச்சு..” நம்பிக்கை வாக்கெடுப்பு நமக்கா இல்ல அவங்களுக்கா? அதிமுக, திமுக-வை வெளுத்து வாங்கிய தவெக MLA!

விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்ற “ஒரே ஒரு ஓட்டு” காட்சி தற்போது நிஜ அரசியலிலும்
சீனிவாச சேதுபதி
Published on
Updated on
1 min read

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் பெரும் கவனம் ஈர்த்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு, அவரது சொந்த தொகுதியில் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடந்து முடிந்த 17வது சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனை வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றார். தேர்தல் முடிவை தொடர்ந்து பெரியகருப்பன் தாக்கல் செய்த அவசர வழக்கும் விதிமுறை காரணங்களால் நிராகரிக்கப்பட்டதால், சீனிவாச சேதுபதியின் வெற்றி உறுதியானது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற சீனிவாச சேதுபதிக்கு, திருப்பத்தூர் மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருப்பத்தூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், தனது வழக்கமான பேச்சு பாணியில் பல கருத்துகளை பகிர்ந்தார்.

“எல்லாருமே சொல்றாங்க ஒரு ஓட்டுல ஜெயிச்சிட்டாங்கனு... ஆனா நான் வாங்கியது 83,375 ஓட்டு,” என தொடங்கிய அவர், “திருப்பத்தூர் என்றால் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்ப யாரை கேட்டாலும் அந்த ஒரு ஓட்டுல ஜெயிச்ச ஊரா என்று சொல்றாங்க. இனிமேல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திருப்பத்தூர்காரன் என்று சொல்லலாம்,” என தெரிவித்தார். மேலும், “நம்மள குறைத்து மதிப்பிட்டாங்க. ஆனா வாழ்க்கையில் யாரை மறந்தாலும் நம்மளை மறக்க மாட்டாங்க. யார்ரா அந்த ஆளு என்று இன்னும் தேடிக்கிட்டே இருக்காங்க,” என திமுக வேட்பாளர் பெரியகருப்பனை மறைமுகமாக விமர்சித்தார்.

அதோடு, நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்ற “ஒரே ஒரு ஓட்டு” காட்சி தற்போது நிஜ அரசியலிலும் நடந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், “இது வருங்காலத்தில் பள்ளி பாட புத்தகத்திலேயே வரும் அளவுக்கு பெரிய விஷயம்,” என்றும் கூறினார். இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய சீனிவாச சேதுபதி, “இளைஞர்களுக்கு ஒரு வேகம் இருக்கும். அதை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துங்க. ரோட்டுல யாரையும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க,” என்றார். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பேசிய அவர், “பெண்களோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம். இனிமேல் பெண்களுக்கான காலம் இது. என்ன படிக்கணுமோ படிங்க, எங்க வேலை செய்யணுமோ செய்யுங்க... நாங்க இருக்கோம்,” என உறுதியளித்தார்.

அதே நேரத்தில் அதிமுகவை விமர்சித்த அவர், “ஒரு கட்சி இல்லாமே போச்சு. நம்பிக்கை வாக்கெடுப்பு நமக்கா நடத்தினாங்க, இல்ல அவர்களுக்கா நடத்தினாங்கன்னே தெரியல,” என கிண்டலடித்தார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்டு, “ஒரு ஓட்டுல ஜெயிச்ச நாம, ஒரு வார்டுல கூட அவர்களை ஜெயிக்க விடக்கூடாது,” என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com