“7 ஆண்டுகள் காதலித்து திருநங்கையை கரம் பிடித்த வாலிபர்” - அடைத்து வைத்து மனம் மாற்ற நினைத்த குடும்பம்.. கட்டுப்பாடுகளை கடந்து திருமணம்!

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கட்டாயமாக சேர்த்து, சுமார் இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்க வைத்தது...
transgender marriage
transgender marriage
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ். கணினி தகவல் தொழில்நுட்பம் படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியைச் சேர்ந்த கயல்விழி என்ற திருநங்கை, 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய அவர்கள், பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க தொடங்கி உள்ளனர். சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தங்களது உறவை திருமணமாக மாற்ற முடிவு செய்தனர்.

பிரவீன்ராஜ் தனது காதல் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, திருநங்கையை திருமணம் செய்ய அவரது பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த எதிர்ப்பை மீறி இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்ற பிரவீன்ராஜை, குடும்பத்தினர் கயல்விழியிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அவரை சென்னையில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கட்டாயமாக சேர்த்து, சுமார் இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் அவரை வீட்டிற்கு அழைத்து வந்த குடும்பத்தினர், வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து, மணப்பெண் பார்க்கும் பணியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பிரவீன் ராஜ், உடனடியாக தனது மனைவி கயல்விழிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை மற்றும் சட்ட உதவி மையத்தை அணுகினர்.

அங்கு அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில், மாலை மாற்றி, தாலி கட்டி, சுயமரியாதை முறையில் தங்களது திருமணத்தை மீண்டும் பதிவு செய்து சட்டப்பூர்வமாக உறுதி செய்தனர். பல ஆண்டுகளாக நீண்ட காதல், குடும்ப எதிர்ப்பு, பிரிவு, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட பிறகும், ஒருவரை ஒருவர் கைவிடாமல் இணைந்த இந்த தம்பதியின் வாழ்க்கைப் பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காதலுக்காக அனைத்து தடைகளையும் தாண்டி ஒன்றான இவர்களின் கதை, அப்பகுதியில் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com