திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், குத்துவிளக்கு ஏற்றுவதில் தவெக எம்.எல் ஏ மற்றும் காங்கிரஸ் எம். பி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், முசிறி எம்எல்ஏ விக்னேஷ், மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கை ஏற்றினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றுவதற்காக வந்து மெழுகுவர்த்தியை கையில் வாங்கினார். அப்போது அவருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி, அவரை முந்திக்கொண்டு வந்து “தான் குத்துவிளக்கு ஏற்றுவதற்கு முன்பாக எப்படி ஏற்றலாம்” எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குத்துவிளக்கு ஏற்றுவதற்காக திலக் கையில் வைத்திருந்த மெழுகுவர்த்தி கீழே விழுந்தது, இருப்பினும் மீண்டும் நவல்பட்டு விஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்திய நிலையில் திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி குத்துவிளக்கை ஏற்றினார். ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார்.
கர்ப்பிணிப் பெண்களுக்காக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கூட்டணி கட்சியினரிடையே பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சுற்றிலும் அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்