

திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அமைச்சராக அவர் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர். சமூக அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசியதுடன், கலவரத்தைத் தூண்டும் விதமாகவும், முதலமைச்சர் விஜயை ஒருமையில் குறிப்பிட்டு பேசியதாகவும் குற்றஞ்சாட்டி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவரது சமூக வலைதள பக்கத்தில் “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற காரணத்தைக் கூறி, மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவசரமாக கைது செய்திருப்பது 'Take Diversion' அரசின் செயல்.” என கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் அவரை விமர்சித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அதில் “வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதில், fake narrative திமுகவை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வேலையை அச்சு பிறழாமல் செய்தால், திமுகவை மக்கள் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் அவதூறு கழகத் தலைவராக மாறி, வெறும் வாயில் அவதூறுகளை மென்று கொண்டே ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின் சார்.பொறுப்பானப் பதவியில் இருந்ததோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பை உணராமல் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் என்ன கூறியது என திமுக மற்றும் ஸ்டாலின் சாரின் செவிகளில் ஏறாமல் போனது ஏனோ?
அனிதா ராதாகிருஷ்ணனா அல்லது அவதூறு கோதாகிருஷ்ணனா என்பது போன்று பேசியதை ஸ்டாலின் சார் வேண்டுமானால் மெச்சிக் கொள்ளலாம். ஏனெனில், திமுக அவதூறு கழகமாக மாறி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில், fake narrative அறிக்கை விட்டு, புனித பிம்பம் கட்டும் build up அரசியலை ஸ்டாலின் சார் செய்ய முற்பட்டுத் தோற்றிருக்கிறார். எந்தத் தவறும் செய்யாத பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு எத்தனையோ பேர் மீது அடக்குமுறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்த ஸ்டாலின் சார், இப்போது ஜனநாயகக் காவலர் வேஷம் போடுகிறார்.
கைது மாடல் அரசாகவே மாறி இருந்த கரப்ஷன் கபடதாரிகளான திமுகவினர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு மீது கல்லெறிவது கயமைத்தனமன்றி வேறென்ன? மக்கள் தீர்ப்பை மதிக்காமல், ஆட்சி அதிகாரம் இழந்த ஆத்திரத்தில், மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் தன் கொத்தடிமைக் கூட்டத்து முன்னாள் அமைச்சரைத் தூண்டிவிட்ட ஸ்டாலின் சார், இரண்டு நாள்களாக எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இப்போது வந்து, வீட்டுக்குள் இருந்து, வெற்று அறிக்கை வெளியிடுகிறார். உப்பைத் தின்றால் சப்பாத்தியா சாப்பிட முடியும்?. தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்.
குதிரை பேரம், ஒட்டக பேரம் முதல் அனைத்து அரசியல் மிருக பேரங்களையும் நடத்தத் தொடங்கி உள்ள திமுக, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதால் இப்போது ஜனநாயக வேஷம் போட்டு, அவதூறு கச்சேரியை ஆரம்பித்துள்ளது. திருட்டு மாடல் திமுக ஆட்சியின் ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துவிடுமே என்ற பயத்தில் உத்தமர் வேடம் போட்டு, மக்களை மீண்டும் ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் சார் ஈடுபட்டால், இதை மறந்துவிட வேண்டாம், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என பதிவிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.