“மகள் என நினைத்து வேறு சடலத்துக்கு இறுதி சடங்கு செய்த பெற்றோர்” - சுடுகாட்டில் தடுத்து நிறுத்திய போலீசார்.. சவக்கிடங்கில் அதிர்ச்சி!

அனுஷ்காவின் உடல் தவறுதலாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது...
dead body change issue
dead body change issue
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  கூலித்தொழிலாளி சுமன்.  இவரது 17 வயது மகள் அனுஷ்கா, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த (ஜூலை 24) ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்துள்ளனர்.  பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய  நிலையில், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு அனுஷ்கா உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆர்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மீண்டும்  ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றபோது, அனுஷ்காவின் உடல் சவக்கிடங்கில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது, மணலி பகுதியில் தற்கொலை செய்து உயிரிழந்த பிரியதர்ஷினி (18) என்பவரின் உடலுக்கு பதிலாக, அனுஷ்காவின் உடல் தவறுதலாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சவக்கிடங்கில் டோக்கன் எண் அல்லது அடையாள விவரங்கள் மாற்றப்பட்டதே இந்த தவறுக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலைத் தொடர்ந்து மணலி போலீசார் உடனடியாக பிரியதர்ஷினியின் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது இறுதிச்சடங்கு நடைபெற்று, உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. போலீசார் உடனடியாக சுடுகாட்டிற்கு சென்று அங்கு உடலுக்கு நடந்துகொண்டு இறுதி சடங்குகளை நிறுத்தி, அங்கு இருந்த உடலை மீட்டு மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அனுஷ்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் சரியாக ஒப்படைக்கப்பட்டதுடன், பிரியதர்ஷினியின் உடலும் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டு இருவரின் இறுதிச் சடங்குகளும் நடைபெற்றன.

இந்த சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சவக்கிடங்கில் உடல்கள் மாறி ஒப்படைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டோக்கன் நடைமுறை மற்றும் உடல் அடையாளப்படுத்தும் செயல்முறைகளில் ஏற்பட்ட தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com