

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு பக்கம் ஆட்சி அமைக்கப் போவது யார் என்கிற பரபரப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கச் சென்றதாகத் தீயாய் செய்திகள் பரவின. இதனால் தவெக - அதிமுக கூட்டணி அமையப்போகிறதோ என்கிற விவாதம் ஊடகங்களில் அனல் பறக்கத் தொடங்கியது.
ஆனால் இந்தத் தகவல் முழுக்க முழுக்கத் தவறானது எனத் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி நிர்மல்குமார், தாங்கள் அதிமுகவிடம் எந்தவிதமான ஆதரவையும் கோரவில்லை என்றும், பரவும் செய்திகள் உண்மையில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். உண்மையில் ஈபிஎஸ் வீட்டிற்கு இன்று காலை சென்றது புஸ்ஸி ஆனந்த் கிடையாது என்பது தற்போது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.
இந்தக் குழப்பத்திற்கு முக்கியக் காரணமே தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் பயன்படுத்திய கார்தான் என்பது தெரியவந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ், இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றி குறித்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக இன்று காலை ஈபிஎஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர் பயன்படுத்திய காரின் எண்ணைக் கண்டு, அது ஆதவ் அர்ஜுனாவின் கார் என்றும், அதில் புஸ்ஸி ஆனந்த் தான் வந்துள்ளார் என்றும் அங்கிருந்தவர்கள் தவறாகப் புரிந்துகொண்டனர்.
இந்தச் சிறு அடையாளக் குழப்பத்தால், தவெக - அதிமுக இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு மாபெரும் வதந்தி மாநிலம் முழுவதும் பரவியது. காரில் வந்தது புஸ்ஸி ஆனந்த் அல்ல, லால்குடியில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் தான் என்பது உறுதியானதும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.