“சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களை களமிறக்குவார்” - தவெக-வின் முக்கிய அறிவிப்பு.. எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் தொண்டர்கள்!

தமிழக வெற்றி கழகத்தில் கடந்த சில நாட்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக...
“சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களை  களமிறக்குவார்” - தவெக-வின் முக்கிய அறிவிப்பு.. எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் தொண்டர்கள்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம், பொதுகுழுக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கூட்டணி குறித்த நிலைப்பாடுகள் மற்றும் வேட்பாளர் தேர்வு என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என மூன்று முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் கடந்த சில நாட்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று சில வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியானது.

அதனை தொடர்ந்து அனைவரும் வேட்பாளர்கள் அறிவிப்பை எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று காலை ஈரோட்டில் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சிலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்” தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் தான் அறிமுகம் செய்து வைப்பார். ஆனால் இன்று வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் எந்த திட்டமும் இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தொடர்ந்து இன்று வேட்பாளர்கள் அறிமுகம் செய்ய படுவார்கள் என்றும் குறிப்பாக நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர், என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் கட்சி முக்கிய தகவல் வெளியிட்டிருக்கிறது. அதில் வேட்பாளர் அறிவிப்பு குறித்து தெளிவான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் “வெற்றிவாகை சூட போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே.

வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களை களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்.” என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com