

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில வலைதள செய்தித் தொடர்பாளர் தமிழன் ராகுல் காந்தி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய MLA கனிமொழி சந்தோஷ், “தமிழில் வணக்கம் என்று கூறினால் ட்ரோல் செய்து விடுவார்கள் எனவே ட்ரோலில் உள்ளதையே கூறிவிடுகிறேன்” என்று “அனைவருக்கும் மன்மத வணக்கம்” என்று தனது உரையை தொடங்கினர்.
அவர் பேசியதாவது “சட்டசபை துவங்கியதில் இருந்து சிறு குழந்தை முதல் 90 வயது தாத்தா வரை கவுண்டம்பாளையம் கனிமொழி சந்தோஷ் என்றால் யார் என்று தெரிகிறது. 100 நாளில் இந்த மேனா மினுக்கி என்ன செய்து கிழித்து விட்டார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கமெண்ட் வருகிறது, 100 நாளில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வேலையை துவக்கி வீடு செல்வதற்கு இரவு 11 மணி ஆகிவிடுகிறது” என்றும் “அந்த அளவிற்கு மக்களின் கோரிக்கைகளை கேட்டு பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் "சித்தி சீரியல், அண்ணாமலை சீரியல், பிக் பாஸ் எல்லாம் தாண்டி சட்டசபை தற்போது நன்கு ரீச் ஆகியிருக்கிறது" என்று தெரிவித்தார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிடம் பற்றி பேசும்பொழுது தனக்கு மிகவும் கோபம் வந்ததாகவும், ஆனால் அங்கு எதையும் காட்டிக் கொள்ள முடியாது. “ஒரு உண்மையை கூற வேண்டும் என்று நினைத்தேன் தற்பொழுது அந்த உண்மையை கூறுகிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “நான் கட்சியில் சேர்வதற்கு முன்பு இதே ஜோதிடரிடம் கரூர் கம்பெனி என்னிடம் பேக்கஜ் பேசினார்கள்” என்றும் “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக கூறி எனது Youtube பக்கத்தில் பதிவு செய்ய வேண்டுமென்றும் அதற்கு 15 லட்சம் ரூபாய் பேக்கேஜ் பேசினார்கள்" என்றும் தெரிவித்தார். அப்பொழுது கூட திமுக ஜெயிக்காது என்று கணித்ததாகவும் இருந்தாலும் திமுக தான் ஜெயிக்க வேண்டும் என்று வீடியோ பதிவில் கூற வேண்டும் என்று என்னிடம் பேக்கேஜ் பேசியதாக தெரிவித்தார்.
சட்டசபையில் சேர்களை தூக்கி வீசுவது போன்ற சம்பவங்கள் எல்லாம் கூட நடக்கும் அப்படி இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தினர் எதுவும் செய்யக் கூடாது என்று எங்களிடம் கூறி அனுப்பி விட்டார்கள் என்று தெரிவித்தார். இன்று கூட பல்வேறு செய்திகளில் “என்னிடம் 26 கார்கள் உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாகிறது. மக்கள் வரிப்பணத்தை தூக்கி சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள் என்ற அவர், கோபத்துடன் "நீங்கள் வந்து பார்த்தீர்களா? எந்த ஆதாரத்தை வைத்து அவ்வாறு பேசுகிறார்கள்? சட்டமன்ற உறுப்பினர் என்றால் செருப்பு போடக்கூடாது தலையை சீவக் கூடாது குளிக்க கூடாது அப்படியே வரவேண்டும் என்று ஏதாவது உள்ளதா? என்று கடிந்து கொண்டார். “சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்பவர்கள் தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விட்டார்.
என்னிடம் அவர்கள் பேசிய ரெக்கார்டு எல்லாம் இருக்கிறது தேர்தலில் ஜெயிப்போமா மாட்டோமா? என்று கேட்ட கேள்விகளின் ரெக்கார்டு எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று கூறினார். என்னை அழகான பொம்மை எனக் கூறுகிறார்கள் இந்த அழகான பொம்மை ஆபத்தான பொம்மையும் கூட என்றும் தூரமாக நின்று முகம் தெரியாமல் பேசிக் கொள்ளுங்கள் என் முகத்திற்கு முன்பு வந்தால் இந்த அழகான பொம்மை என்ன செய்யும் என்பது பிறகு தெரியும் என்று கூறினார்.
2031 தேர்தலில் இரண்டு கட்சி எல்லாம் இருக்காது நம்முடைய ஒரே கட்சி தான் இருக்கும் இரண்டு கட்சிகளுக்கு இடையில் போட்டி என்றெல்லாம் இருக்கவே இருக்காது என்றென்றும் தமிழக கட்சி கழகம் தான் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் பாக்கி விடாமல் தயவு செய்து ஜெயித்து விடுங்கள் என்று கூறினார். நான் இந்த கட்சிக்கு புகுந்த வீட்டிற்கு வந்த மருமகள் போன்றவள் என்றும் அப்படி இருக்கும் பொழுது மாமியார் கொடைச்சல் எல்லாம் இருக்கும் எனக்கு இங்கு ஆண் மாமியார் ஆண் நாத்தனார் போன்றவர்கள் தான் இருக்கிறார்கள், எங்களுக்குள் சண்டை வரலாம் ஆனால் இதனை வெளி நபர் யாரும் எங்களுக்குள் வந்து விடக்கூடாது. நாங்கள் அடித்துக் கொள்வோம் என்று யாராவது உள்ளே வந்தால் ஒரே வெட்டு தான் சேர்த்து போட்டு விடுவோம் என்று கூறினார்.
மேலும் திமுக மற்றும் அதிமுக ஐடி விங்கிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்ட அவர் கவுண்டம்பாளையத்திற்கு Free visibility தான் செய்கிறார்கள் என்று தெரிவித்தார். “தற்பொழுது வெளி தொகுதி மக்கள் எல்லாம் கவுண்டம்பாளையத்திற்கு குடி பெயர்ந்து வருகிறார்கள் என்று தகவல் வருகிறது” என்றும் “ஏற்கனவே நமது தொகுதியில் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது” என்று கூறினார். சட்டம் சபையில் ஒவ்வொருவரும் 10 கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் பாவம் நம்முடைய சபாநாயகர் அவர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று தெரிவித்தார்.
"நிச்சயமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் பட்டா பிரச்சனை தீர்ந்துவிடும்" என்றும் "நம்முடைய ஆட்சியில் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை சென்றாலே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விடுகிறது" என்று தெரிவித்தார். அனைவரும் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நன்கு வேலை செய்யுங்கள் நம்மிடம் இன்னும் முழு அரசாங்கம் உருவாகவில்லை அதற்கு இன்னும் மூன்று மாத காலங்கள் ஆகும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை என்று அதனை எல்லாம் தட்டி தூக்குவதற்கு காலம் ஆகும் மூன்று மாதம் வேலை செய்யுங்கள் மூன்று மாதத்திற்கு பிறகு பெரிய விழாவாகவே நாம் இதனை நடத்தலாம் என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்