சட்டப்பேரவையில் தவெகவின் பலம் அதிகரிப்பு.. எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல்!

தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது...
TVK MLA Swearing-In Ceremony
TVK MLA Swearing-In Ceremony
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் இன்று (அக் 12) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே இரு தொகுதிகளையும் கைப்பற்றி தவெக கவனம் ஈர்த்தது.

இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சத்தியபாமாவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா 66,841 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

முன்னதாக, நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இருவரும், இடைத்தேர்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 234 உறுப்பினர் இடங்கள் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்தன. இதனால் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 227 ஆக இருந்தது.

இதில், சபாநாயகர் உட்பட தமிழக வெற்றிக் கழகத்துக்கு 107 உறுப்பினர்கள் இருந்தனர். திமுகவுக்கு 59, அதிமுகவுக்கு 41, காங்கிரஸுக்கு 5, பாமகவுக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளார்.தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com