தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு.. திமுக-அதிமுக கூட்டு சேர்ந்தால் 107 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்வோம் - அதிரடி காட்டும் விஜய்!

அவரை வீழ்த்துவது கடினம் என்றும் ஒரு தரப்பினர் அஞ்சுவதே இந்தத் திட்டத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது...
tvk vijay and tvk candidate
tvk vijay and tvk candidate
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், தற்போது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை திமுக அல்லது அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தால், தங்கள் கட்சியின் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகுவார்கள் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது. மக்கள் செல்வாக்கைப் பெற்ற தவெக-வை ஓரங்கட்டிவிட்டு, இரு கட்சிகளும் ரகசியமாக கைகோர்த்து ஆட்சி அமைக்கத் திட்டமிடுவதாக அக்கட்சி சந்தேகம் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், 107 இடங்களை வைத்துள்ள விஜய்யை ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இதுவரை அழைக்கவில்லை. தன்னிடம் போதிய பெரும்பான்மை இல்லை என்று கூறி விஜய் விடுத்த கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். கடந்த இரண்டு நாட்களில் நடந்த சந்திப்புகளின் முடிவில், 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தவெக-வுக்கு பெரும்பான்மை கிடைக்க இன்னும் 10 இடங்களே தேவைப்படுகின்றன. ஏற்கனவே 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில், திமுக தனது எம்.எல்.ஏ-க்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்க, திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து ஒரு திட்டம் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. விஜய் ஆட்சிக்கு வந்தால் எம்.ஜி.ஆர் போல நீண்ட காலம் ஆட்சியில் இருப்பார் என்றும், அவரை வீழ்த்துவது கடினம் என்றும் ஒரு தரப்பினர் அஞ்சுவதே இந்தத் திட்டத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக தரப்பிலும் எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். தற்போதைக்கு தவெக-வுடன் கூட்டணி இல்லை என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்குப் பொறுமையாக இருக்குமாறும் தனது கட்சி உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மறுபுறம், தனிப்பெரும் கட்சியாக உள்ள விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவுக்கு சிபிஐ மற்றும் விசிக போன்ற கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டசபையில்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமே தவிர, அதற்கு முன்பே ஆதரவு கடிதங்களைக் கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் நிலையில் உள்ள திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் விஜய்க்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் செயல்படுவது ஜனநாயகம் ஆகாது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது மாநிலம் முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com