பிரதமர் மோடி நிகழ்ச்சியில் திடீர் கோஷம்.. “முதல்வர் டூ பிரதமர் விஜய்” என அட்டையில் எழுதி காட்டிய தவெகவினர்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும்...
TVK Supporters Vijay Prime Minister Slogans
TVK Supporters Vijay Prime Minister Slogans
Published on: 
Updated on: 
1 min read

சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தினர் “அடுத்த பிரதமர் விஜய்”, “முதல்வர் டூ பிரதமர்” எனக் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்குமான நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் நடைபெற்றது. மெட்ரோ பயண திட்டத்தை தொடக்கி வைத்ததை தொடர்ந்து சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய முதல்வர் விஜய் “சென்னையின் வளர்ச்சி மட்டுமின்றி, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும்” அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழ் பெற்றிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர், தங்களிடம் இருந்த அட்டையின் பின்புறத்தில் “அடுத்த பிரதமர் விஜய்”, “முதல்வர் டூ பிரதமர்” என எழுதி அதைக் காண்பித்தனர். மேலும், அவர்கள் எழுந்து நின்று விசில் அடித்தபடி “அடுத்த பிரதமர் விஜய்”, “தளபதி, தளபதி” எனக் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் கோஷமிட்டவர்களை அமைதியாக இருக்குமாறு பலமுறை எச்சரித்தனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், பிரதமர் மோடி தனது உரையைச் சுருக்கிக்கொண்டு நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை முடித்ததாகக் கூறப்படுகிறது. பிரதமர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தவெகவினர் எழுப்பிய இந்தக் கோஷங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com