“தவெக ஆட்சி 25 ஆண்டுகள் தொடரும்!” - “234 தொகுதியிலும் நாங்கள் தான்”... மாறி மாறி புகழ்ந்த தவெக அமைச்சர்கள்!

"ஜெலுசின் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.. ஸ்டாக் தீர்ந்து விடும்” என எதிர்கட்சிகளை..
செங்கோட்டையன், விஜயபாலாஜி
Published on
Updated on
1 min read

ஈரோட்டில் உள்ள FATIA அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கைத்தறித் துறை அமைச்சர் விஜய பாலாஜி மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாலாஜி, “தவெக ஆட்சி விரைவில் கவிழும் என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு உறுதியாக தொடரும்” என தெரிவித்தார். மேலும் “முதலமைச்சர் கூறிய மதச்சார்பற்ற ஆட்சியை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், ஈரோடு நகரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய பாலாஜி “இரண்டு மாத காலமாக, இந்த ஆட்சி இன்னைக்கு கவுந்திடும்.. நாளைக்கு கவுந்திடும்.. என புலம்பி கொண்டு இருக்கிறார்கள்” என்றும் “ஜெலுசின் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.. ஸ்டாக் தீர்ந்து விடும்” என எதிர்கட்சிகளை விமர்சித்தார்.

விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோட்டில் நான்கு முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பட்ஜெட் முடிந்த பின்னர் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார். தவெக-வில் செங்கோட்டையன் தலைமையில் ‘அகதிகள் அணி’ இருப்பதாக விமர்சித்ததை குறித்த கேள்விக்கு, “யார் அகதிகளாகப் போகிறார்கள் என்பது இனிமேல் தெரிய வரும்” என பதிலளித்தார். மேலும் திருப்பூர், ஈரோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுகுறித்து பார்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தனது பேட்டி மற்றும் கருத்துகளை முடக்கி வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் நாடு அறிந்த ஒன்று என்றும், அந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்ததை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் விமர்சித்தார்.

தேர்தலுக்கு முன்பாக ஜனநாயகன் திரைப்படம் வந்திருந்தால், 234 தொகுதிகளிலும் தங்களது கட்சியே வெற்றி பெற்றிருக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் “நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தேர்தல் நிலைப்பாடு” என்றும் “நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதி என்றும், அதனை யார் செயல்படுத்தப் போகிறார்கள் என்பது கேள்வியாக இருப்பதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் FATIA தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தமோகன், சண்முகம், தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு மற்றும் FATIA நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com