

நேற்று தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல நடிகையை மறைமுகமாக குறிப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், உதயநிதியின் பேச்சுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன. மேலும், நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்திருப்பது அரசியல் திசைதிருப்பும் நடவடிக்கை என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், அதேசமயம் தமிழக வெற்றிக் கழக அரசின் கைது நடவடிக்கையின் அணுகுமுறையையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காவிரி நதிநீர்ச் சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தனது பதிவில், காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும் என்றும் சீமான் கூறியுள்ளார்.
அதேசமயம், அந்தப் பேச்சை காரணமாகக் கொண்டு கைது நடவடிக்கையில் தமிழக வெற்றிக் கழக அரசு இறங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் மேடைப் பேச்சுகளுக்கெல்லாம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றால், தன் மீதும், தனது கட்சியினர்மீதும் தினமும் தனிநபர் விமர்சனம், அவதூறு மற்றும் ஆபாசத் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி உத்தரவிட்ட பிறகும், தன்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், ஆனால் இன்று காலை 9 மணிக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்தில் உதயநிதி கைது செய்யப்பட்டிருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார் “மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, “என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?” என்றும் அரசியல் பரபரப்பு கேள்வியை முன் வைத்துள்ளார்.
மேலும், மேடைதோறும் திமுகவை விமர்சித்துவிட்டு, திமுக அரசு கடைப்பிடித்ததாக கூறப்படும் அதே கைது நடைமுறைகளை தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பின்பற்றுவது எந்த வகையில் மாற்று அரசியலாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், திருவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் புகார்கள் குறித்து இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் மட்டும் அரசு மிகுந்த வேகத்துடன் செயல்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக, காவிரி நதிநீர் பிரச்சினையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கைது நடவடிக்கைகள் மூலம் தமிழக மக்களின் கவனத்தை திசைதிருப்புவதாக குற்றம்சாட்டிய சீமான், "சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை. அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை எடுப்பது எந்த அரசாக இருந்தாலும் தவறானது. மேடையில் தவறாகப் பேசினால் அவதூறு வழக்கு தொடர வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பிலேயே கைது செய்வது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது" என்று வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்