“மண்ணை விட்டு போக மாட்டோம்.. கருணைக் கொலை செய்துவிடுங்கள்” - மேகமலை விவகாரத்தில் மக்கள் உச்சக்கட்ட போராட்டம்!

தலைமுறைகளாக பிறந்து வளர்ந்த எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்ற...
Varusanadu Hill Villages Protest(megamalai issue)
Varusanadu Hill Villages Protest(megamalai issue)
Published on
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில், வருசநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதது. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருசநாடு மலை கிராம மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தங்களது வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலை கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான காமராஜபுரம் மலை கிராமத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், தங்களை தங்கள் பூர்வீக மண்ணில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலை கிராம மக்கள், நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்தனர். “பல தலைமுறைகளாக பிறந்து வளர்ந்த எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்ற முயற்சிப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு வெளியேற மாட்டோம். அதையும் மீறி எங்களை வெளியேற்ற வேண்டும் என்றால், கருணைக் கொலை செய்து விடுங்கள்” என வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக மின்சாரத்துறை, வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருவதாகவும் தற்போது அவர்கள் ஊழியர்களாக உள்ள நிலையில் துறை ரீதியாக அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறு பல ஆண்டுகளாக அரசு பணியில் இருப்பவர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி நெருக்கடி கொடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களது வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் மலை கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். வருசநாடு மலை கிராம மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக, அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com