மிகவும் பாதுகாப்பான நகரம் ..! உலகப் பட்டியலில் 208-வது இடம்பிடித்தது சென்னை..!

மிகவும் பாதுகாப்பான நகரம் ..!  உலகப் பட்டியலில் 208-வது இடம்பிடித்தது   சென்னை..!
Published on
Updated on
1 min read

முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய  ‘க்ரைம் இண்டக்ஸ்’  பட்டியலில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை 208-வது இடத்தை பதிவு செய்துள்ளது. 

எழில்மிகு சென்னை நகரில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ அனைத்து மாவட்ட மக்களும் வாழ்ந்து வரும் நிலையில், வடமாநிலத்தவர்களின் வாழ்வாதாரத்துக்கும் இந்நகர் புகலிடமாக உள்ளது.

மும்பை, நொய்டா போன்று முக்கிய நகரங்களைக் காட்டிலும் சென்னை பாதுகாப்பான நகரமாக கூறப்படும் நிலையில், ‘க்ரைம் இண்டெக்ஸ்’ போன்ற உலகளாவிய கணக்கீடுகளிலும், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பாதுகாப்பான நகரம் எது என, பல்வேறு நாடுகளின் குற்றப்பதிவுகளை ஆராய்ந்து அதன் பட்டியலை  ‘க்ரைம் இன்டெக்ஸ்- 2023’ அறிக்கை வெளியிட்டுள்ளது. பட்டியலில் முதல் இடம்பிடிக்கும் நகரம் மிகவும் ஆபத்தானது என்பதும், கடைசியில் இருக்கும் நகரம் பாதுகாப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தான் 334 நகரங்கள் கொண்ட பட்டியலில், 208 -வது இடத்தைப் பிடித்து பாதுகாப்பான நகரமாக சென்னை அறியப்பட்டுள்ளது. 

சென்னையில் குற்ற அளவீடு 40 சதவீதமாகவும், பாதுகாப்பு அளவீடு 60 சதவீதமாகவும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய நகரங்களிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக 296-வது இடத்தை மங்களூரு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 259-வது இடத்தில் வதோதராவும், 253-வது இடத்தில் அகமதாபாத்தும் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், டெல்லி, நொய்டா, குர்கான், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பிரபல நகரங்கள், சென்னையை விட பல இடங்கள் பின்தங்கியுள்ளது. மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், பெங்களூருவை விட மிகவும் பாதுகாப்பான இடத்தில் சென்னை உள்ளது பெருமையளிக்கும் விஷயம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com