“இடதுசாரிகள், விசிகவிடம் ஆதரவு கேட்க கூசவில்லையா?- விஜய்யை இரண்டாம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர்.. தவெக - வை சாடிய சிந்தனை செல்வன்

வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது?
sinthanai selvan vck
சிந்தனை செல்வன்
Published on
Updated on
2 min read

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்ததி பேசியதாவது, “ நாங்கள் மணமக்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். மேலும் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார். மேலும் நாளை ஆதரவு குறித்து முடிவுகள் அறிவிக்கபடும் எனவும் தெரிவித்தார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் தவெக-விற்கு எதிராக தொடர்ந்து  தங்களது கருத்துக்களை பதிவிட்டு, பொது வெளியில் பேசியும் வருகின்றனர்.

அதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் சமூக வலைதளத்தில் தனது எதிர்ப்பு கருத்தை பதிவு செய்துள்ளார். “தமிழகத்தில் கொல்லைப்புற வழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி” செய்வதாகவும் “தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் “தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் திரு விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா? என கேள்வி எழுகிறது” என்றும் தவெக-வின் இரண்டாம் கட்ட தலைவர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் போன்றவர்களை மறைமுகமாக விமர்சிப்பது போல் தெரிகிறது. காரணம் தவெக கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இதற்கு முன் விசிக-வில் முக்கிய பொறுப்பில் பயணித்தவர், பின்பு தலைமையின் விதிகளை மீறியதால் அவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து சிந்தனை செல்வன், “ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக தவெக செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா ? இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும் , கவர்னர் வழியாக பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா? வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது?” என்று விஜயின் தலைமை பண்பை கடுமையாக விமர்சித்திருந்தார்.  மேலும் அவரின் கூட்டணி ஆதரவு குறித்த அணுகுமுறை சரியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “வெற்றி பெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர்தீட்டாமல் , அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பெருந்தன்மையாக கருத்துக்களை திரு விஜய் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் வெற்றிச்செய்தி வந்த மறுக்கணமே மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள் என ஆணவத்தையும்,  பழி வாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரிதானா? 5வது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரசுடன் கை கோர்த்துக் கொண்டு வாரிசு அரசியலைப் பேசுவதை விட நகைமுரண் வேறேதும் இருக்க முடியுமா? என்று காங்கிரஸ்- தவெக கூட்டணி குறித்து பெரும் அரசியல் கேள்வியை முன்வைத்துள்ளார்.

திமுகவை மன்னராட்சி என பேசிவிட்டு திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி கண்டுள்ள இடதுசாரிகளையும் விசிகவையும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்ன வகை தர்க்க நியாயம் உள்ளது.? கடுமையாக விஜயை விமர்சித்துள்ளார். “திரு விஜய் நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசனாக்கி முடக்கி வைத்து விட்டு அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக்கொள்ள திரு விஜய்யை பயன்படுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்த மறுநிமிடமே திமுக அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சமல்லவா?” கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

“விசிக கட்சியில் தலைவர் திருமாவுடன் இருபது பேர் மட்டும் தான் இருக்கிறார்கள், மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான். சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறார்கள்”  என்ற ஆதவ் அர்ஜூனா வின் கருத்தை குறிப்பிட்டு, இப்படி பேசுவது என்ன வகை அரசியல் அறம்? எனும் கேள்வியை முன் வைத்துள்ளார்.

விஜயின் இந்த அரசியல் வருகையில், “தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைக்கும் ரிசார்ட் அரசியலை கொண்டு வந்திருப்பது ரசிக்கத்தகுந்ததல்ல” என்றும் தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களை குறித்து பதிவில் குறிப்பிட்டிருந்தார். விஜய்யை அடுத்த கட்ட தலைவர்கள் தவறாக வழி நடத்துவதாகவும் அதை விஜய் சுதாரித்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com