தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் நகருக்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்யின் நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
லண்டன் நகரின் உயரமான கட்டிடமான ஷார்ட் கோபுரத்தின் வெளியே விஜய் ரசிகர்களைச் சந்திக்க இருந்தார். இதனால் தெருவில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் குழப்பமான சூழல் நிலவியது.
விஜய் தரப்பில், பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிப்பெருக்கியில், “பொதுப் பாதுகாப்பு காரணமாக எங்களுக்கு அனுமதி இல்லாததால், நாங்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்” என விஜய்யின் குழு சார்பாகப் பேசிய ஒருவர் அறிவித்தார்.
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களில் தவெக ஐடி விங் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், லண்டன் பெருநகர காவல்துறையின் கோரிக்கையை ஏற்றும், முதல்வரும் வெற்றி பெற்ற தலைவருமான அவரை உங்களைச் சந்திக்க முடியாத ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவரைச் சந்திக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்,” எனக் கூறியுள்ளனர்.
அத்துடன், "தலைவர் தங்கியிருக்கும் விடுதியின் நுழைவாயிலிலோ அல்லது அவர் பயணிக்கவிருக்கும் வழியிலோ காத்திருப்பது போன்ற முயற்சிகளைத் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்." என்றும் கூறப்பட்டிருந்தது.
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தப் பயணத்தில் சுமார் ரூ.12,300 கோடி மதிப்பிலான முதலீடுகள் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அக்குழு கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் 9,400 உயர் வருவாய் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்