தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தவெக தலைவர் விஜய்யின் பிரசார பாணி வித்தியாசமாக இருந்தது. குறிப்பிட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, பிரசார வாகனத்தில் நின்றபடி சில நிமிடங்கள் உரையாற்றுவது என அவரது பிரசாரப் பயணம் அமைந்திருந்தது. ஆனால், தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விஜய் காட்டி வரும் தீவிரம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுராந்தகத்தில் வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டிய விஜய், தாராபுரத்தில் மாட்டு வண்டியை ஓட்டியபடி வாக்கு சேகரித்துள்ளார்.
அவரது இந்த நடவடிக்கைகள், இடைத்தேர்தலில் தவெக தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த விஜய், வழியில் நின்றிருந்த விவசாயி ஒருவரின் மாட்டு வண்டியில் ஏறினார். பின்னர், வண்டியின் கயிற்றைப் பிடித்து மாடுகளை இயக்கியபடி, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். மேலும், தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
மதுராந்தகத்தில் காலில் செருப்பு அணியாமல் சேற்றில் இறங்கி டிராக்டர் ஓட்டியதைத் தொடர்ந்து, தாராபுரத்தில் பாரம்பரிய கிராமிய அடையாளமான மாட்டு வண்டியை ஓட்டியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக விஜய்யின் இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தலின்போது பல்வேறு தொகுதிகளில் குறுகிய நேரமே உரையாற்றிவிட்டுச் சென்ற விஜய், தற்போது இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இதனால், இந்தத் தேர்தலுக்கு அவர் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிராக உள்ளூர் அளவில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்த அவருக்கு உடனடியாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதை, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் சிலர் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தாராபுரத்தில் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும், வாக்காளர்களின் ஆதரவைப் பெற திமுகவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தவெக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக விஜய் நேரடியாகக் களத்தில் இறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தவெகவின் கள நிலவரம் குறித்த தகவல்களே விஜய்யின் பிரசாரத் தீவிரத்துக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்படாத கருத்தாகும். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிராமங்கள் மற்றும் வார்டுகள் வாரியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. முதல்வர் விஜய் நேரடியாகக் களத்தில் இறங்கி டிராக்டர், மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேல்தட்டு பிம்பத்தைத் தாண்டி, கிராமப்புற மக்களுடன் நெருக்கமாக இருப்பவர் என்ற தோற்றத்தை உருவாக்க விஜய் மேற்கொள்ளும் முயற்சிகள் பேசு பொருளாகி உள்ளது. டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்துவது, டிராக்டர் ஓட்டுவது, மாட்டு வண்டியில் பயணிப்பது போன்ற அவரது செயல்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன. ஆனால், இந்தப் பிரசார உத்திகள் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுமா என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்