"அரசியல்வாதிகள் சரியில்லை.. அப்புறம் ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டாங்க?" - விஷால்

முடிவுகளில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
"அரசியல்வாதிகள் சரியில்லை.. அப்புறம் ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டாங்க?" - விஷால்
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை அண்ணா நகர் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்த பிறகு நடிகர் விஷால் பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்தார். "அரசியல்வாதிகள் தங்களுடைய வேலையைச் சரியாகச் செய்திருந்தால், நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரப்போகிறார்கள்?" என்று அவர் எழுப்பிய கேள்வி, அங்கிருந்த அரசியல் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது.

அண்ணா நகர் தொகுதியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய விஷால், அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை என குற்றம் சாட்டினார். "அண்ணா நகர் தொகுதி என்ன சீரும் சிறப்புமாகவா இருக்கிறது? தொகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. எந்தவிதமான உருப்படியான பணியும் நடைபெறவில்லை" என்று அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். ஒரு விஐபி (VIP) தொகுதியே இந்த நிலையில் இருக்கும்போது, மற்ற பகுதிகளின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். மக்கள் பிரதிநிதிகள் மீது நிலவும் இந்த அதிருப்தி, தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று பதிவாகி வரும் வாக்குப்பதிவு நிலவரத்தைப் பார்க்கும்போது, தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் வரப்போவது உறுதியாகிறது என்று விஷால் குறிப்பிட்டார். "இந்த முறை முதல் முறை வாக்காளர்கள் மிக அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பதைப் பார்க்க முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம். இளைய தலைமுறையினர் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் கூறினார். இளைஞர்களின் இந்த எழுச்சி, மே 4-ஆம் தேதி வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு முடிய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு விஷால் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்தார். "வெயிலைப் பொருட்படுத்தாமல் உடனடியாக வந்து உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள். இன்னும் நேரம் இருக்கிறது, உங்கள் ஒரு ஓட்டு இந்த மாநிலத்தின் தலையெழுத்தையே மாற்றும் வலிமை கொண்டது. தயவுசெய்து யாரும் வீட்டில் இருக்காதீர்கள், வந்து ஓட்டுப் போடுங்கள்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com