“வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்க வேண்டும்” - தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு! எக்ஸிட் போல் முடிவுகளின் அதிருப்தியா?

“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீது தங்கள் கட்சி நம்பிக்கை கொள்வதில்லை” என்றும்
tvk meeting
Published on
Updated on
2 min read

கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் நேற்று விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் வேட்பாளர்களை சந்தித்து தேர்தல் முடிவுகளுக்கு பின் என்ன செய்ய வேண்டும் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பனையூர் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதில் “தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் உடனடியாக பனையூருக்கு வர வேண்டும். இரவு எந்நேரமானாலும் என்னை வந்து சந்திக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளை பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தவெக வேட்பாளர் நிர்மல் குமார், “திமுக எந்த நேரத்திலும் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கும், கவனமாக செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தோம். திமுக தோல்வி பயத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்றும் தெரிவித்தார். மேலும் “தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு உண்மையை தரவில்லை. மக்களின் வாக்குப்பதிவை மே நான்காம் தேதி பார்ப்போம்” என்றும் “இதுவரை பார்த்திராத தேர்தல் களம், கணிக்க முடியாத தேர்தல் களமாக அமைந்துள்ளது” என்றும் தெரிவித்தார். தவெக நிர்வாகிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டுமென டிஜிபி இடம் கடிதம் கொடுத்தாகவும் குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் மரிய வில்சன், “விஜய் கள நிலவரம் குறித்து விசாரித்ததாக தெரிவித்தார். மேலும், வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கிறது? களத்தில் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன? எந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டது? என்பதை குறித்து விஜய்  கேட்டறிந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்க வேண்டும்" என ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் அன்று வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வேட்பாளர்கள் அங்கிருந்து செல்ல வேண்டாம் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்

தவெக ஆலோசனை கூட்டம் குறித்து பேசிய வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து பேசினார். அதில் , “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீது தங்கள் கட்சி நம்பிக்கை கொள்வதில்லை” என்றும் “உண்மையான தேர்தல் முடிவுகளை அறிய அனைவரும் காத்திருக்குமாறும்” கேட்டுக்கொண்டார். தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம்  முறையாகப் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செங்கோட்டையன் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். செங்கோட்டையன் கூறியதாவது “விசில் சத்தம் பொறுத்தவரை இந்தியாவே மிரளும் வகையில் இருக்கும், உலக வரலாற்றில்  இது போன்ற விசில் சத்தம் கேட்பது இதுவே முதல் முறையாக இருக்கும், எனவும் தேர்தல் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்தார். “இது விசில் சத்தம் இல்லை *பாம் சத்தம் போல் இருக்கிறது“ என்ற தமிழிசை தெரிவித்த விமர்சனத்திற்கு “சில பேருக்கு *பாம் வெடித்து பழக்கம்” என்று தெரிவித்து விட்டு புறப்பட்டார்.

எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி பல தரப்பட்ட கருத்துக்களையும், ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு அதிருப்திகளையும் ஏற்படுத்தியது. அதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில்  கவனம் பெற்றுள்ளது. மேலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் வேறு எங்கும் போக கூடாது என்றும், உடனடியாக கட்சியின் விஜயை சந்திக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com