

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்டம்பர் 1) தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து நண்பகல் 12 மணியளவில் பாசன நீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் முதல்வர் விஜய். முதல்வர் வருகையால் சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூருக்கு சாலை மார்க்கமாக செல்லும் முதல்வரை காண மக்கள் சாலை ஓரம் குவிந்துள்ளனர். மேலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை இருந்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதுமான அளவில் இல்லாததால் குறிப்பிட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க குறைந்தபட்சம் 90 அடி நீர்மட்டம் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஜூன் 12ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கீழ் இருந்ததால், வழக்கமான கால அட்டவணைப்படி தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக கபினி அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. இதன் தாக்கமாக மேட்டூர் அணைக்கும் தொடர்ந்து நீர் வந்து சேர்ந்தது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறக்கும் நடவடிக்கை இன்று நடைபெறுகிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காமலாபுரம் விமான நிலையம் முதல் மேட்டூர் அணை வரையிலான வழித்தடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் பயணிக்கும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நீரின் மூலம் காவிரி படுகையைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணையின் முழு நீர்மட்டம் 120 அடியாகவும், அதன் மொத்த கொள்ளளவு 93.4 டிஎம்சியாகவும் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் இரண்டரை மாதங்கள் தாமதமாக பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக விஜய் மேட்டூர் அணைக்கு சென்று காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.