"White Band" இயக்கம் முதல் டாஸ்மாக் வரை... பொள்ளாச்சி மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றிய அண்ணாமலை!

விதிமீறி செயல்படும் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது...
annamalai pollachi speech
annamalai pollachi speech
Published on
Updated on
1 min read

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள "வீ த லீடர்ஸ்" இயக்கத்தின் முதல் மாநில மாநாடு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெற்றது. "போதையில்லா தமிழகம்" என்ற இலக்கை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு தொடர்பாக ஆறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தை "White Band Month" ஆக கடைப்பிடித்து, "நான் ஒருபோதும் போதைப்பொருளைப் பயன்படுத்த மாட்டேன்; மற்றவர்களையும் பயன்படுத்த விடமாட்டேன்" என்ற உறுதிமொழியுடன் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படக் கூடாது என்ற விதிமுறையை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், விதிமீறி செயல்படும் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மூன்றாவது தீர்மானமாக, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்களை கட்டாயமாக அமைத்து, அவற்றின் செயல்பாடுகளை அரசு கண்காணித்து, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

நான்காவது தீர்மானத்தில், காலை நேரங்களில் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்தவும், கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஐந்தாவது தீர்மானத்தில், அரசு அனுமதி பெற்ற FL2 மதுபான விற்பனை நிலையங்கள் விதிமுறைகளை மீறாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி புதிய FL2 உரிமங்கள் வழங்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆறாவது மற்றும் இறுதி தீர்மானத்தில், போதைப்பொருள் தடுப்புச் சட்டங்களை மேலும் வலுப்படுத்தி, மாவட்டந்தோறும் போதைத் தடுப்புக் குழுக்களை அமைப்பது, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு கல்வியை கட்டாயப்படுத்துவது, மறுவாழ்வு மையங்களை விரிவுபடுத்துவது மற்றும் மறுவாழ்வு பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. "போதையில்லா தமிழகம்" என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட இந்த ஆறு தீர்மானங்கள், மாநாட்டில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், தமிழக அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com