அதிகாரிகள் வாக்கு என்னாச்சு..? மீண்டும் போராட்டக்களத்தில் 'சாம்சங்' ஊழியர்கள்

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் நிலைமை மோசமைடைந்தது என்றும், மேலும் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்தும் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகக் 'சாம்சங்' ஊழியர்கள்...
Sansung employees protest
Published on
Updated on
2 min read

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து நகரிலுள்ள மாநில தலைமைச் செயலகம்வரை போராட்டப் பேரணி நடத்த முயன்ற 'சாம்சங்' இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். வெகுநாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஊழியர்களின் போராட்டம், இன்னும் முடிவிற்கு கொண்டுவரப்படாதது ஏன்?.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள 'சாம்சங்' தொழிற்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு, 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரியும், ஊதிய திருத்தம், எட்டு மணி நேர வேலை அட்டவணை மற்றும் இதர சலுகைகளைக் கோரியும் தொழிலாளர்கள் ஒரு மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும்,100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த பிரச்சனைக்கான காரணமாக கூறப்படுவது, சுங்குவார்ச்சத்திரம் உதவி ஆய்வாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 'சாம்சங்' கேட் எண் 3 அருகே கவிழ்ந்த மினி லோட் வேன் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து அவர் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர். அமைச்சர்கள் பங்கேற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் நிலைமை மோசமைடைந்தது என்றும், மேலும் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்தும் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகக் 'சாம்சங்' ஊழியர்கள் குற்றம் சாட்டினார்.

மேலும், தங்களது இந்த கோரிக்கைக்கு, சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கத் தயாராக இருந்த நேரத்தில், கலவரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர்களது கூடாரத்தை அதிகாரிகள் அகற்றிவிட்டதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். ஒருபுறம் ஊழியர்கள் நிர்வாகத்திடம் அழுத்தத்தையும் மறுபுறம், காவல்துறையினரும் அழுத்தம் கொடுத்து வந்தனர். ஒரு மாத கால வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, 2024 அக்டோபர் 15 அன்று, தமிழக மாநில அரசின் நான்கு பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இந்த விவகாரத்தில் தலையிட்டது. மேலும், மாநில தொழிலாளர் துறையால் வகுக்கப்பட்ட 'ஒப்புக்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு' இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தொழிற்சங்கப் பதிவுப் பிரச்சினை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், நீதிமன்றத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக தமிழக அரசு உறுதியளித்தது. கோரிக்கை மனு தொடர்பாக, நியமிக்கப்பட்ட சமரச அதிகாரிக்கு, எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கவும், தீர்வு காண்பதற்காக உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக எந்தத் தொழிலாளியும் தண்டிக்கப்பட மாட்டார் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 38 நாட்கள் நீடித்த காலவரையற்ற வேலைநிறுத்தம் 2024ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று கைவிடப்பட்டது. பின்பு, ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு திரும்பினார்.

அதன் பின்பு, தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேரலாம் என்ற நம்பிக்கையுடன் தொழிற்சாலைக்குத் திரும்பினர். அதற்கு மாறாக, சுமார் 1,500 தொழிலாளர்கள் அனைவரும் தலா 150 பேர் கொண்ட பத்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு வார கால "பயிற்சி" அல்லது "மறுசீரமைப்பு" திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இந்த அமர்வுகள், கல்வி சார்ந்தவையாக இருப்பதற்குப் பதிலாக, கட்டாயப்படுத்துவதாகவும், அச்சுறுத்துவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்தன என்று தொழிலாளர்கள் தரப்பில் கூறினார். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சாம்சங் 'இந்தியத் தொழிலாளர் சங்கத்தைப்' (SIWU) பதிவு செய்ய உத்தரவிட்டது. 38 நாள் வேலைநிறுத்தம் மற்றும் 212 நாள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, SIWU 2025 ஜனவரி 27 அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.

முன்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனின் தலையீடுகளுக்குப் பிறகு, இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார். இருப்பினும், நிறுவனம் இன்னும் அதற்கு இணங்கவில்லை. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கணேசன் உறுதியளித்ததாகவும், விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த பேரணி ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

பல தடையையும் மீறி தொழிலாளர்கள் முன்னேற முயன்றபோது, ​​காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது. தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் அதிகரித்தது, மேலும், காவல்துறை போராட்டக்காரர்களைக் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றது. கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இடைநீக்கம் செய்யப்பட்ட 27 ஊழியர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கையில் தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். மேலும், முன்னர் அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறுமா? இல்லையா? என்ற கேள்விக்குறியை ஊழியர்களிடம் எழுப்புகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com