

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மூலனூர் நால்ரோடு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “படித்த, பண்புள்ளவர்களுக்கு உங்கள் வாக்கா? அல்லது சுயநலத்திற்காக வாக்களிப்பதா? என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள்” என்றும் “தாராபுரம் தொகுதியை யார் முன்னேற்றுவார்கள், யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நேற்று முதலமைச்சர் பிரச்சாரம் செய்ததை குறிப்பிட்ட அவர், “மேடையில் அவரே ஒப்புக்கொண்டார். பாஜகவின் கிளைக் கழகம் தான் தவெக என்று. தவெக வேட்பாளர் தான் சத்தியபாமா என்றாலும், அவர் வாக்காளர்களுக்கு சத்தியமாக இல்லை. அதனால்தான் ஓட்டு கேட்கச் செல்லும் போது மக்கள் விரட்டி அடிக்கின்றனர். வாக்களிக்கும் போதும் அவரை புறக்கணிக்க வேண்டும்” என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தீய சக்தி, தூய சக்தி, தீர்ந்து போன சக்தி என்பது முக்கியமில்லை, விசுவாசம் தான் முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும். மேடையில் நடந்த நாடகத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாமும் பெண், அவரும் பெண். அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
மேலும், “ராஜ்மோகன் வந்து காதில் பேசியதும் ‘ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன்’ என சினிமா போல நடத்திவிட்டனர். மக்களுக்கு துரோகம் செய்துவிட்டேன் என அழுதாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது அவருக்குத்தான் தெரியும்” என கூறினார். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதி மக்களுக்கு செய்யப்போகும் பணிகள் குறித்து பேச வேண்டும் எனக் கூறிய பிரேமலதா, “இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியை முன்னேற்ற மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை சொல்ல வேண்டும். ஆனால் ஆதவ் அர்ஜுனா கேப்டன் ஆத்மா என பேசுகிறார். பத்திரிகையாளர்கள் கேட்டதால் மட்டுமே அவருக்கு பதில் சொல்கிறேன். இல்லையென்றால் இதையெல்லாம் லெப்ட் ஹாண்டில் டீல் செய்து.. தட்டிவிட்டு சென்றிருப்பேன்” என்றார்.
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்த அவர், “கேப்டனைப் பற்றி பேச நீ யார்? நீ என்றாவது அவரை பார்த்துள்ளாயா? அவருக்கு உன்னுடன் என்ன சம்பந்தம்? மந்திரி இல்லை, அவர் முந்திரி. தேமுதிக கட்சி தான் கேப்டனின் ஆன்மா. கேப்டனை பற்றி பேசுவதை ஆதவ் அர்ஜுனா இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், “நான் டீசன்டாக இருக்க விரும்புகிறேன். உண்மையை சொல், உரக்க சொல் என்று கேப்டன் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களை அந்த தலைவர் ஆன்மா மன்னிக்குமா என்பதை பாருங்கள். விஜய் தம்பிக்கு வேண்டுமானால் கேப்டனை தெரியும். மற்ற யாருக்கும் கேப்டனைப் பற்றி பேச அருகதை இல்லை” என தெரிவித்தார். அரசின் அறிவிப்புகள் குறித்தும் விமர்சித்த பிரேமலதா, “எந்த அறிவிப்பு வந்தாலும் முதலமைச்சர் உடனடியாக வாபஸ் வாங்கிவிடுகிறார்” என்றார்.
கரூரில் உயிரிழந்த 41 பேரை நினைவு கூர்ந்த அவர், “கரூரில் இறந்த 41 பேருக்கு நினைவு நாள் வந்தது. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி கூட அஞ்சலி செலுத்தவில்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். மீண்டும் இங்கு வருகிறாராம். அவர்களுக்கு தேவை என்றால் 10 முறை வருவார்கள்; தேவை இல்லை என்றால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்” என்று விமர்சித்தார். இறுதியாக, “தாராபுரம் மக்கள் நியாயத்தின் பக்கம், திமுக பக்கம் நின்று துரோகத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்கள் என்பதை நான் அக்டோபர் 9-ம் தேதி பார்க்க வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் தனது முடித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்