

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான நகராட்சி நிர்வாகத்துறையில் பணி அமர்த்தலுக்கான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமாரை தொடர்புபடுத்தி பேச்சுகள் எழுந்தன.
இந்த நிலையில் தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். யார் இந்த ஜனனி அசோக்குமார், அவர் ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தி பேசப்படுவது ஏன்?
சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் கோவையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா, அம்மாவுடன் இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.
பள்ளிப்பருவம் முடிந்தபோதே மீடியாவில் பணியாற்றும் ஆர்வத்தினால் உள்ளூர் சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அங்கிருந்து சில விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.
2016ம் ஆண்டு விஜய் டிவியில் தொகுப்பாளராக வேண்டும் என்று வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு மாப்பிள்ளை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சீரியல் ஹிட் ஆக, சில படங்களில் ஹீரோயின் ஃப்ரெண்ட் பாத்திரத்திலும் நடித்து வந்தார்.
அடுத்தடுத்து, செம்பருத்தி (ஜீ தமிழ்), மௌன ராகம் (விஜய் டிவி), நாம் இருவர் நமக்கு இருவர் (ஸ்டார் விஜய்), ஆயுத எழுத்து (விஜய் டிவி), காற்றுக்கென்ன வேலி போன்ற ஹிட் சீரியல்களில் தோன்றினார். இப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், 12 லட்சம் பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஜனனி அசோக்குமார் அரசியல் கேள்விகளுக்கு பதில் அளித்த நேர்காணல் ஒன்று பரவி வருகிறது. அதில் அவர் தான் ஒரே ஒருமுறை வாக்களித்து உள்ளதாகவும், அதுவும் அவருக்கு விருப்பமான ஜெயலலிதாவுக்கு அளித்ததாகவும் கூறியுள்ளார். அப்போது 2026 தேர்தலில் விஜய்க்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கடந்துவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் ஜனனி அசோக் குமாருக்கு கே.என்.நேருவின் ஊழல் வழக்கில் தொடர்பு உள்ளதாக பேசப்படுகிறது.
ஜனனி அசோக்குமார், "சென்னை மாநகராட்சி டெண்டர் மூலமாக நிறைய சம்பாதித்தாகவும் அதன் மூலம் வந்த ஊழல்/கமிஷன் பணத்தில் ECR ல் துணிக்கடை, ஸ்வீட்கடை, ஹோட்டல் என நிறைய நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ஏக போகத்திற்கு வாழ்ந்து வந்துள்ளார்" என சமூக வலைத்தள பதிவுகள் பரவுகின்றன.
"கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன், உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி மூலம் நிறைய பணம் ஜனனி அசோக்குமார், ஷபானா போன்ற நிறைய தமிழ் சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டு அதன் மூலம் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜனனி அசோக்குமார் மற்றும் அவரது நெருங்கிய தோழி செம்பருத்தி நாடகப்புகழ் சின்னத்திரை நடிகை ஷபானா வையும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற சின்னத்திரை நடிகைகளையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, கே.என்.நேரு நகராட்சி நிர்வாக 634 கோடி ஊழல் வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து அனைவரின் வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது." எனத் தகவல் பரவி வருகிறது.
அவரது விளக்கத்தில், "கடந்த இரண்டு நாட்களாக எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எனது பெயரை, ரூ.634 கோடி முறைகேடு புகாருடன் தொடர்புபடுத்தி பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் கதைகளுக்குப் பதிலளிப்பது முக்கியம் என நான் கருதுகிறேன்.
நான் ஒன்றை மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நான் எப்போதும் அரசியல் சார்பற்றவளாகவே இருந்து வருகிறேன்.
நான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்ததில்லை, அதேபோல அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பையும் பேணியதில்லை. என்னைப்பற்றிப் பரப்பப்படும் விஷயங்கள் அனைத்தும் முற்றிலும் உண்மையற்றவை. நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.
உண்மைகளை ஆராயாமல், சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்காமல் அல்லது வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் இப்படிப்பட்ட தீவிரமான குற்றச்சாட்டுகளை எப்படி வெளியிடுகிறார்கள்? ஊடகங்கள் துல்லியமான தகவல்களை வழங்குவதே பொறுப்பாகும்.
எனது பெயரையோ படத்தையோ இத்தகைய குற்றச்சாட்டுகளுடன் இணைத்துத் திரும்பத் திரும்பக் கூறுவது உண்மையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு விசாரணைக்கான கோரிக்கை எழுப்பப்படுவது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் தவறு செய்ததற்கான ஆதாரமாகிவிடாது.
திரையுலகில் கடந்து வந்த இந்த ஆண்டுகளில், எனது வாழ்க்கையைக் கண்ணியத்துடனும், எனது உண்மையான குணத்தைப் பிரதிபலிக்கும் நற்பெயருடனும் கட்டியெழுப்பக் கடுமையாக உழைத்துள்ளேன்.
எந்தவொரு பின்புலமும் இன்றி, பூஜ்ஜியத்திலிருந்து எனது வாழ்க்கையையும் வாழ்க்கைப் பாதையையும் உருவாக்கியிருக்கிறேன். இத்தகைய குற்றச்சாட்டுகள் என்னை ஒரு கேள்வியைக் கேட்க வைக்கின்றன. இணையத்தில் பரப்பப்படும் ஒரு பொய் செய்தி இதையெல்லாம் மறைத்துவிடும் என்றால், ஒரு சுதந்திரமான பெண்ணாக இருப்பதற்கும், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையை உருவாக்கி கண்ணியத்துடன் வாழ்வதற்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?
மக்களுக்கு ஒருவரைப் பற்றியோ அல்லது உண்மையைப் பற்றியோ தெரியாமலேயே, இணையத்தில் பரவுவதைக் கண்டு உடனடியாக நம்பி விடுகிறார்கள். என்னை நன்கு அறிந்தவர்களுக்கு இக்கூற்றுகள் பொய்யானவை என்று தெரியும். என்னை நான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் வேதனையாகவும் சோர்வாகவும் இருக்கிறது.
தற்போது எனது வாழ்க்கையைப் பற்றி யாருக்கும் நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் வேதனை அளிப்பது என்னவென்றால், உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் முன்பே, ஒரு பெண்ணைச் சுலபமாகக் குற்றம் சாட்டி முத்திரை குத்திவிடும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதுதான்.
ஊடக நிறுவனங்களும் இணையத்தில் உள்ளவர்களும் எந்தவொரு தகவலையும் வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பாக அதை உறுதிப்படுத்துமாறும், என்னைப் பற்றித் தவறாகக் குறிப்பிடும் பதிவுகளைத் திருத்துமாறும் அல்லது நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து ஒரு குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்ட உண்மையாகக் கருத வேண்டாம். இந்தக் கடினமான காலத்தில் சிந்தனையோடும், நியாயமாகவும், பரிவுடனும் நடந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களின் அன்பும் ஆதரவும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.