

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் செங்கம் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தின் தனித் தொகுதியான செங்கம், சாத்தனூர் அணை மற்றும் கோலப்பொடித் தொழிலுக்குப் புகழ்பெற்றது. 15 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், வரும் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செங்கம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 15.17 சதவீதம் பேர் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.4 சதவீதம் பேரும், 41 முதல் 60 வயதுடையவர்கள் 36.8 சதவீதம் பேரும் உள்ளனர். சமுதாய ரீதியாக வன்னியர்கள் 32 சதவீதம் பேரும், ஆதிதிராவிடர்கள் 26 சதவீதம் பேரும் உள்ளனர். முதலியார் சமூகத்தினர் 8 சதவீதம் பேர் உள்ளனர். இது 92 சதவீதம் கிராமப்புறங்களைக் கொண்ட ஒரு முழுமையான விவசாயத் தொகுதியாகும்.
செங்கம் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக விவசாய விளைபொருட்களை உலர வைக்கப் போதிய உலர் களங்கள் இல்லாததால் விவசாயிகள் சாலைகளைப் பயன்படுத்துவதும், அதனால் விபத்துகள் ஏற்படுவதும் பெரிய குறையாக உள்ளது. மலைக் கிராமங்களுக்கு முறையான ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தார்ச்சாலை வசதிகள் இல்லாதது மக்களின் வேதனையாக உள்ளது. செங்கம் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கப் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும், காய்கறிகளைப் பாதுகாக்க அரசு சார்பில் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுகவின் மு.பெ. கிரி 48 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் நைனாக்கண்ணு 43 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக 190 பூத்களில் வலுவாகவும், அதிமுக 135 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 80 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இப்பகுதியில் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, செங்கம் தொகுதியில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 41 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 21 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 124 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதிமுக 95 பூத்களில் மட்டுமே வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 25 பூத்கள் மட்டுமே ஸ்விங் நிலையில் உள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.