

மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசியலின் 'பவர் சென்டர்' என்று அழைக்கப்படும் கொளத்தூர் தொகுதியில் இந்த முறை போட்டி அனல் பறக்கிறது. 2011 முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கோட்டையாகத் திகழும் இந்த தொகுதியில், தற்போது நிலத்தடி நீரோட்டமாக ஆட்சிக்கு எதிரான சில அதிருப்தி அலைகள் வீசுவதை மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. வண்ண மீன் வளர்ப்புக்குப் பெயர்பெற்ற இந்த தொகுதியில், கடந்த 15 ஆண்டுகளில் பல மாற்றங்கள் வந்திருந்தாலும், மழைநீர் வடிகால் இணைப்புச் சிக்கல்கள் இன்றும் தீராத தலைவலியாகவே உள்ளன. குறிப்பாக 41 முதல் 60 வயதுடைய 40.84% வாக்காளர்கள், அடிப்படை வசதிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். இது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் தரவுகளை ஆழமாகப் பார்த்தால், 2021-ல் 60.73% வாக்குகளைப் அள்ளிய திமுக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 59.52% ஆகச் சரிந்துள்ளது. அதே நேரத்தில், அதிமுக 20.22%-லிருந்து 27.35% ஆகத் தனது பலத்தை மிரட்டலாக உயர்த்தியுள்ளது. பூத் வாரியான கணக்கீட்டில், திமுக 140 பூத்துகளில் வலுவாக இருந்தாலும், அதிமுக 70 பூத்துகளில் தனது கொடியை உயர்த்திப் பிடித்துள்ளது. சுமார் 20 பூத்துகள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் 'ஸ்விங்' நிலையில் இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.
2026 தேர்தல் கணிப்பு தரவுகள்:
கான்சிலிடிக்ஸ் ஆய்வின்படி, 2026-ல் திமுக 42% வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 32% வாக்குகளைப் பெற்று கடும் போட்டியைத் தரத் தயாராகி வருகிறது. புதிதாகக் களம் காணும் தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 23% வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. 10% வாக்கு வித்தியாசம் என்பது ஒரு முதலமைச்சருக்குச் சாதகமான ஒன்றாகத் தெரிந்தாலும், பூத் லெவல் தரவுகள் அதிமுகவின் அசுர வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.