

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
சென்னையின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை தொகுதி, தமிழக அரசியல் வரலாற்றில் நீக்கமற நிறைந்த ஒரு தொகுதியாகும். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி என்பது இதன் கூடுதல் சிறப்பு. அடையாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த தொகுதியில், எளிய மக்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை அனைத்து தரப்பினரும் வசிக்கின்றனர். தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் மா. சுப்பிரமணியம் அவர்களின் தொகுதியான இங்கு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிய மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் குழுவினர் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.
வாக்காளர் வகைப்பாடு மற்றும் சமூகக் கட்டமைப்பு:
சைதாப்பேட்டை தொகுதியின் வாக்காளர் நிலவரத்தைப் பார்த்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 42.14% ஆக இருந்து இந்தத் தொகுதியின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 28.09% பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 18.74% பேரும் உள்ளனர். சமூக ரீதியாகப் பார்த்தால், வன்னியர் சமுதாயத்தினர் 20% பெற்று முதலிடத்தில் உள்ளனர். ஆதி திராவிடர்கள் 11%, யாதவர்கள் 5%, நாடார்கள் 5%, மற்றும் முதலியார்கள் 5% என வசிக்கின்றனர். மீதமுள்ள 54% வாக்காளர்கள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும், வெளியூர்களில் இருந்து வந்து குடியேறிய அரசு ஊழியர்களாகவும் உள்ளனர். நகர்ப்புற வாக்காளர்கள் 98% உள்ள இந்த தொகுதியில், மக்களின் கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு மிக அதிகம்.
முக்கிய உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள்:
அமைச்சரின் தொகுதி என்றாலும், இங்குள்ள மக்கள் சில அடிப்படைப் பிரச்சினைகளால் அவதிப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, லேசான மழை பெய்தாலே சாலைகளில் நீர் தேங்குவது மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ள அபாயம் இன்றும் தீராத கவலையாக உள்ளது. கிண்டி தொழிற்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை சரியாக இல்லை என்றும், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சைதாப்பேட்டை தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
மேலும், முதியவர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்களுக்கான பிரத்யேக அரசு மருத்துவ வசதிகள் மற்றும் உளவியல் ரீதியான பராமரிப்பு மையங்கள் தேவை என்பது இங்குள்ளவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. எரியாத தெருவிளக்குகள் மற்றும் போதிய காவலர் பாதுகாப்பு இல்லாததால் சில பகுதிகளில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகவும் மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் ஆய்வில் மக்கள் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளனர்.
தேர்தல் தரவுகள் மற்றும் பூத் வாரியான பலம்:
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் மா. சுப்பிரமணியம் 50.02% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனது வாக்கு வங்கியை 53.53% ஆக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக 31.68%-லிருந்து 36% ஆகத் தனது பலத்தை அதிகரித்துள்ளது. பூத் வாரியான கணக்கீட்டில், 2021-ல் 127 பூத்துகளில் வலுவாக இருந்த திமுக, 2024-ல் 148 பூத்துகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. அதிமுக 2021-ல் 93 பூத்துகளில் வலுவாக இருந்தது, ஆனால் 2024-ல் அது 80 பூத்துகளாகக் குறைந்துள்ளது. சுமார் 52 பூத்துகள் 'ஸ்விங்' (Swing) நிலையில் உள்ளன. இந்த 52 வாக்குச்சாவடிகளில் உள்ள மக்கள் எப்போதுமே மாற்றத்தை விரும்புபவர்களாகத் தெரிகிறது.
2026 தேர்தல் கணிப்பு - தவெக-வின் அதிரடித் தாக்கம்:
மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் நடத்திய 2026 கணிப்பு முடிவுகள் சைதாப்பேட்டையில் ஒரு விறுவிறுப்பான மும்முனைப் போட்டியை உறுதி செய்கின்றன. குறிப்பாகத் தமிழக வெற்றி கழகம் (தவெக) இங்கு சுமார் 27% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் வாக்குகளையும் சரிசமமாகப் பிரிக்கப்போகிறது.
தற்போதைய கணிப்பின்படி, திமுக 39% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் தொடர்கிறது. அதிமுக 31% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27% வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 8% வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் இருந்தாலும், 52 ஸ்விங் பூத்துகளில் தவெக ஊடுருவி இருப்பது அமைச்சருக்கு ஒரு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மா. சுப்பிரமணியம் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தொகுதி மக்களுடனான நெருக்கமான தொடர்பு அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தேடித்தர வாய்ப்புள்ளது. வரும் 2026 தேர்தலில், சைதாப்பேட்டைத் தொகுதியைத் தக்கவைக்க திமுக கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.