திருவள்ளூர் தொகுதியில் வெல்லப் போவது யார்? தி.மு.க. கோட்டையைத் தகர்க்குமா அ.தி.மு.க.? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" பிரம்மாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து 21 முதல் 25 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது..
Thiruvallur constituency
Published on
Updated on
3 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருவள்ளூர் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தின் மையப்பகுதியாக விளங்கும் இத்தொகுதி, தற்போது தி.மு.க.வின் வசம் உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் மீண்டும் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா களமிறங்கியுள்ளார். இருவருமே தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால், இங்கு போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thiruvallur constituency

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பொறுத்தவரை, 18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்கள் 12.76 சதவீதமும், 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 38.51 சதவீதமும் உள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் பட்டியல் சமூகத்தினர் 26 சதவீதமும், நாயுடு சமூகத்தினர் 24 சதவீதமும், முதலியார் சமூகத்தினர் 18 சதவீதமும், வன்னியர் சமூகத்தினர் 18 சதவீதமும் உள்ளனர். கிராமப்புற மக்கள் 55 சதவீதமும், நகர்ப்புற மக்கள் 45 சதவீதமும் வசிக்கக்கூடிய இத்தொகுதியில், சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் நகர்ப்புற வளர்ச்சி வேகமெடுத்து வருகிறது.

Thiruvallur constituency

திருவள்ளூர் தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளை, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமை பெறாதது போன்றவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகள் மற்றும் உணவகம் இல்லாதது, தாமரைப்பாக்கம் ஏரியைத் தூர்வாரிப் பூங்காவாக மாற்ற வேண்டிய அவசியம், மின்சார ரயில் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் வசதி போன்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. வெளிவட்டச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

திருவள்ளூர் தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

Thiruvallur constituency

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் சுமார் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 160 வாக்குச் சாவடிகளில் (Booths) பலமாகவும், அ.தி.மு.க. 70 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன. சுமார் 90 சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கக்கூடிய (Swing Booths) நிலையில் இருந்தன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இத்தொகுதியில் 53.9 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும் முன்னிலை வகித்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. 34.7 சதவீத வாக்குகளைப் பெற்றது.

Thiruvallur constituency

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, திருவள்ளூர் தொகுதியில் தி.மு.க.விற்குச் சிறிய முன்னிலை (Slight Edge) இருப்பதாகத் தெரியவருகிறது. தி.மு.க. கூட்டணி 40 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 37 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து 21 முதல் 25 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக விஜய் தலைமையிலான த.வெ.க. இத்தொகுதியில் 16 முதல் 18 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Thiruvallur constituency

வெற்றி வித்தியாசத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே வெறும் 3 சதவீத வாக்குகள் மட்டுமே வேறுபாடு உள்ளது. பூத் வாரியான கணக்கீட்டில் தி.மு.க. 150 -170 சாவடிகளிலும், அ.தி.மு.க. 140 - 160 சாவடிகளிலும் முன்னிலையில் உள்ளன. வெறும் 10 சாவடிகள் மட்டுமே இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், தேர்தல் பிரச்சாரத்தின் போது நடக்கும் சிறிய மாற்றங்கள் கூட முடிவுகளைத் தலைகீழாக மாற்றக்கூடும். அனுபவம் வாய்ந்த இரு வேட்பாளர்களுக்கு இடையேயான இந்த மோதலில், த.வெ.க. பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாக அமையும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com