விஜய் - சீமான் இணைந்து நடத்தும் வாக்கு வேட்டை - சிக்கலில் திருத்தணி தொகுதி? வெற்றி யாருக்கு?

இந்த மண், தற்போது பலமான மும்முனைப் போட்டியைச் சந்திக்கும் நிலையில் உள்ளது. நகராட்சியை விட கிராமப்புறங்கள் அதிகம் கொண்ட..
Thirutani constituency
Published on
Updated on
3 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருத்தணி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு எந்த மாதிரியான அரசியல் சூழல் நிலவுகிறது என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் வீற்றிருக்கும் இத்தொகுதி, தற்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரன் பணியாற்றி வருகிறார். ஒரு காலத்தில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. எனப் பல கட்சிகள் வென்ற இந்த மண், தற்போது பலமான மும்முனைப் போட்டியைச் சந்திக்கும் நிலையில் உள்ளது. நகராட்சியை விட கிராமப்புறங்கள் அதிகம் கொண்ட இத்தொகுதியில் விவசாயிகளும் நெசவாளர்களும் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றனர்.

Thirutani constituency
Thirutani constituency

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பார்க்கும்போது, 18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்கள் 14.97 சதவீதமும், 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 36.82 சதவீதமும் உள்ளனர். இவர்களில் 46 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதி ரீதியான அடிப்படையில் வன்னியர் சமூகம் 24 சதவீதமும், பட்டியல் சமூகத்தினர் 21 சதவீதமும், நாயுடு சமூகம் 17 சதவீதமும், முதலியார் சமூகம் 10 சதவீதமும் உள்ளனர். கிராமப்புற மக்கள் 65 சதவீதம் பேர் வசிக்கக்கூடிய இத்தொகுதியில் பெண் வாக்காளர்களின் தாக்கம் வரும் தேர்தலில் மிக அதிகமாக இருக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

Thirutani constituency
Thirutani constituency

திருத்தணி தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பல விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, திருத்தணி மலைக்கோயிலுக்குச் செல்ல ஒருவழிப் பாதை மட்டுமே இருப்பதால், விசேஷ காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரம் ஸ்தம்பித்துப் போகிறது. இதற்கு மாற்றுப் பாதையாக இரண்டாவது மலைப்பாதை அமைக்கும் பணி நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும், இங்கு அதிகளவில் விளையும் மாம்பழங்களுக்காக 'மாம்பழக் கூழ் தொழிற்சாலை' அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சாலை வசதிகள் சேதமடைந்திருப்பது, மழைநீர் வடிகால் வசதி இல்லாமை, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ள இப்பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைப்பது போன்ற அடிப்படை வசதிகள் இத்தொகுதி மக்களின் பெரும் தேவையாக இருக்கின்றன.

Thirutani constituency
Thirutani constituency

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் திரும்பிப் பார்த்தால், தி.மு.க. வேட்பாளர் சந்திரன் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 120 வாக்குச் சாவடிகளில் பலமாகவும், 80 சாவடிகளில் பலவீனமாகவும் இருந்தது. அதேபோல், அ.தி.மு.க. 90 சாவடிகளில் பலமாகவும், 140 சாவடிகளில் பலவீனமாகவும் காணப்பட்டது. நாம் தமிழர் கட்சி சுமார் 40-க்கும் மேற்பட்ட சாவடிகளில் அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பிரித்து தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 50 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 176 சாவடிகளில் பலமாகவும், அ.தி.மு.க. வெறும் 57 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன. அப்போது சுமார் 65 சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலையில் இருந்தன.

திருத்தணி தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

Thirutani constituency
Thirutani constituency

"கான்சிலிடிக்ஸ்" கருத்துக் கணிப்பின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆய்வின்படி அ.தி.மு.க. 40 முதல் 42 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், தி.மு.க. 37 முதல் 39 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாக இணைந்து, எவ்வித மனக்கசப்பும் இன்றி களப்பணியாற்றினால் சுமார் 3 முதல் 5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று தரவுகள் கூறுகின்றன. தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து சுமார் 21 முதல் 25 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவாக அமையும். சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகளால் சிதறடிக்கப்படுவது அ.தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com