தங்கம் தென்னரசுவின் கோட்டையை தகர்க்குமா அதிமுக? "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வசதிகள் போன்றவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன...
virudhunagar
virudhunagar
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருச்சுழி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான திருச்சுழி, ஆன்மீக மகான் ரமண மகரிஷி மற்றும் வீரமிக்க மருது பாண்டியர்கள் பிறந்த பெருமைக்குரிய மண்ணாகும். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தந்தை தங்கப்பாண்டியனின் சொந்த ஊரான இந்த தொகுதி, தற்போது தங்கம் தென்னரசுவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கி வருகிறது. இந்தத் தொகுதியில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 18 முதல் 25 வயதுடையவர்கள் 14.95 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.6 சதவீதமும் உள்ளனர். இது எதிர்வரும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக ஜாதி ரீதியான தரவுகளைப் பார்க்கையில், முக்குலத்தோர் சமூகத்தினர் 30 சதவீதம் எனப் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் 20 சதவீதம், முத்தரையர் 14 சதவீதம், யாதவர்கள் 10 சதவீதம் மற்றும் முஸ்லிம்கள் 6 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இங்கு தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் சமூகத்தினர் விளங்குகின்றனர். அதேபோல் தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக வறட்சியால் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாடு முதன்மையாக உள்ளது. நரிக்குடி போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கக் குளிர்சாதனக் கிடங்குகள் இல்லாததும், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதும் பெரும் குறையாக உள்ளது. இங்கு கறிமூட்டம் போடுவதுதான் மிக முக்கியமான வாழ்வாதாரத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் பருத்தி மற்றும் மிளகாய் கொள்முதல் நிலையங்கள், முறையான பேருந்து நிலையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வசதிகள் போன்றவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு 59 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ராஜசேகர் 24 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளையும், அமமுக 3.7 சதவீத வாக்குகளையும் பெற்றன. 2021 தேர்தலில் 190 பூத்துகளில் திமுக வலுவாக இருந்த நிலையில், அதிமுக 60 பூத்துகளில் மட்டுமே வலுவாக இருந்தது. அதேபோல் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், திருச்சுழி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 43.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துச் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 26 சதவீத வாக்குகளையும், அதிமுகவின் ஜெயபெருமாள் 14.3 சதவீத வாக்குகளையும் பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் 112 பூத்துகளில் திமுக முன்னிலை வகித்தது.

விருதுநகர் தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன் உத்தேசக் கணிப்புகளைக் கான்சிலிடிக்ஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன்படி, அதிமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான திமுக 44 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற தரப்பினர் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 கணிப்பின்படி, 185 வாக்குச்சாவடிகளில் திமுக மிக வலுவாக உள்ளதாகவும், அதிமுக 70 வாக்குச்சாவடிகளில் மட்டுமே வலுவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வாக்குச்சாவடிகள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயக்கூடிய 'ஸ்விங்' பூத்துகளாகக் கருதப்படுகின்றன.

இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 14 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள தங்கம் தென்னரசுவின் செயல்பாடுகள் தொகுதி மக்களிடையே நற்பெயரைப் பெற்றுள்ளதால், அவர் மீண்டும் களம் காணும் பட்சத்தில் திருச்சுழி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com