தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதுதொடர்பான தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வழங்க மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, திமுக - தவெக இடையே சமூகவலைத்தளத்தில் காரசார அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளபக்கமான X-ல், "தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.
அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார். ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.
Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?. ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?.
உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல. உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்தகு பதிலளிக்கும் விதமாக, தவெக ஐடி விங் சார்பில் இருந்து உதயநிதியின் பதிவிற்கு, "உளறல்நிதியிடம் இருந்து ஓர் அறிக்கை வந்துள்ளது. அதில், RTI-யில் தகவல் கிடைக்கிறது கிடைக்கவில்லை என்பது பற்றிப் பேசாமல் தனிப்பட்ட முறையில் தவெக பிள்ளைகள் மீது தரம் தாழ்ந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார். அவர்களின் வெத்துவேட்டு விளம்பர ஆட்சியில் fact checking unit அமைக்கப்பட்டதாம். அதில் அகில உலக அதிமேதாவிகளையே பணியில் அமர்த்தி இருந்ததாகவும் அதன் தலைமைப் பொறுப்பில் சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகளை மிஞ்சும் தி.மு.க.வின் தத்துவ ஆணியை அடித்து நிறுத்தியதுபோலவும் உளறிக் கொட்டி இருந்தார்.
ஓர் உருட்டு யூட்யூபரை வைத்து fact checking unit-ஐ உருட்டிக்கொண்டிருந்த நீங்கள் எல்லாம் பேசுவது பேரிச்சம் பழத்திற்கு விற்கப்பட்ட பித்தளை தன்னைப் பற்றிம் பெரும் build up கொடுத்ததுபோலவே இருக்கிறது. சம்மட்டி அடி வாங்கிய தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களையே தங்கள் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் இறக்கிவிட்டு இருந்ததை உளறல்நிதி மறக்கலாம். சமூகவலைத்தள வாசிகள்தான் மறப்பார்களா?. ஜனங்கள்தான் மறப்பார்களா?. எதிர்க்கட்சி என்றால் தரமான ஆலோசனைகளை மட்டுமே அரசுக்கு வழங்க வேண்டும். அதை விடுத்து
மன்னராட்சி மனப்பான்மையுடன் சாமானிய குடும்பத்துப் பிள்ளைகளை நக்கல் நையாண்டி செய்துகொண்டே இருந்தால் உங்களுக்கு இன்னும் மோசமானத் தோல்விகளைத் தரும் மதுராந்தகங்களும் தாராபுரங்களும்தான் பரிசாகக் கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை" என்று உதயநிதி தவெக-வினரை பற்றி பேசியதற்கு மட்டும் காட்டமாக பதிவிட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.